பாமகவுக்கும், அன்புமணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - ராமதாஸ் பிடிவாதம்

பாமகவுக்கும், அன்புமணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - ராமதாஸ் பிடிவாதம்

அன்புமணி பம்மாத்து வேலைகளில் ஈடுபடுவதை இனி நிறுத்திக் கொள்ள வேண்டும், அவருக்கும் பாமகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற நிர்வாகக்குழு கூட்டத்தில் 13 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் முரளி சங்கர், செயல் தலைவர் ஸ்ரீகாந்தி மற்றும் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்ளிட்ட 22 நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணியை கடுமையாக விமர்சித்து பேசினார்.

அவர் பேசுகையில், “2026 தேர்தலுக்கு முன்பாக நடக்கும் நிர்வாகக் குழு கூட்டம் இது. இந்த கூட்டத்தில் 2026இல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கவும், பேச்சுவார்த்தை நடத்தவும் எனக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அன்புமணிக்கு தலைவர் பதவி இல்லை, சின்னமும் அவருக்கு கொடுக்கவில்லை எனக் கூறிவிட்டது. பாமக நிறுவனத் தலைவர் நான் தான் என உறுதி செய்துள்ளது. பல மாதங்களுக்கு முன்பு அவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம். கட்சி பெயரையோ, சின்னத்தையோ, என் பெயரையோ பயன்படுத்த கூடாது என தெரிவித்துவிட்டேன். இது குறித்து காவல்துறையிடம் புகாரும் கொடுத்துள்ளோம்.

அப்போதும் தொடர்ந்து என் பெயரையும், கட்சி பெயரை சட்டத்தை மீறி பயன்படுத்தி வருகிறார். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இன்று கூட வேட்பு மனு வாங்குகிறார்கள். கட்சியே இல்லாமல் வேட்பு மனு வாங்குகிறோம் என பம்மாத்து வேலை எல்லாம் செய்கிறார்கள். இதனை பாமக வன்மையாக கண்டிக்கிறது. அவருக்கு எவ்வளவோ பதவிகளை கொடுத்து அழகு பார்த்தோம். நான் ஆலமரம் போல கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி வளர்த்த கட்சியை, அவர் நுனிக் கிளையில் அமர்ந்து கொண்டு வெட்ட ஆரம்பித்துள்ளார்.

அதனால் அவருக்கு தான் நஷ்டம். இதனை அன்புமணி நிறுத்தி கொள்ள வேண்டும். கூட்டணி பேச எனக்கு நிர்வாகக் குழு அதிகாரம் கொடுத்துள்ளது. ஜனநாயக நெறிப்படி, முறைப்படி இந்த கட்சியை நடத்தி வருகிறோம். அன்புமணிக்கும், இந்த கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இந்த கட்சியை உருவாக்கியவன் என்ற அடிப்படையில் அவருக்கு மீண்டும் ஒருமுறை தெரிவித்து கொள்கிறேன். இந்த விபரீத அரசியல் விளையாட்டு வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கிறேன்" என்றார்.