ஜாய் கிரிசில்டா - மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஜாய் கிரிசில்டா - மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஜாய் கிரிசில்டா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ், கேட்டரிங் சர்வீஸ் மூலம் பிரபலமானவர். இவர் ‘மெஹந்தி சர்க்கஸ்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உண்டு.

இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாகக் கூறி பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா கூறியிருந்தார். கடந்த 2023-ம் ஆண்டு தங்களுக்குத் திருமணம் நடைபெற்றதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

தான் கருவுற்ற நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னிடமிருந்து விலகியதாகவும் ஜாய் கிரிசில்டா குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக ஜாய் கிரிசில்டா காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும், மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதனிடையே தான் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் தாக்கியதாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் அளித்த ஜாய் கிரிசில்டா, அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்முறை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பியிருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது இன்று மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், முதலில் மத்தியஸ்தம் செய்துவிட்டு அதன்பிறகு இந்த வழக்கு விசாரணையை தொடரலாம் என்று கூறியது. மேலும் வழக்கை வரும் பிப்ரவரி மாதம் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என ஜாய் கிரிசில்டா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜுக்கு நீதிமன்றம் அறிவுரை கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.