நடிகைக்கு எதிரான வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சீமான்!

நடிகை விஜயலட்சுமி குறித்து அவதூறாக பேசியதற்காக சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய நிலையில், உச்ச நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு சீமான் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக காவல் துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை எதிர்த்து சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 12 வாரங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்த வழக்கை சில மாதங்களுக்கு முன் விசாரித்த உச்ச நீதிமன்றம் இரு தரப்பினரும் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. மேலும் அடுத்த கட்ட விசாரணை நடக்கும் வரை சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. ஆனால், விஜயலட்சுமி தரப்பில் சீமானிடம் சமரசத்தை எதிர்பார்க்கவில்லை என்றும், நீதி வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கு செப்டம்பர் 12 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகரத்னா, மகாதேவன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்ததது. அப்போது நீதிபதிகள், "சீமான் செப்டம்பர் 24 ஆம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க தவறினால், சீமானை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்படும்" என்று எச்சரித்தனர். மேலும், விஜயலட்சுமியுடன் சுமூகமாக செல்வதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும் விஜயலட்சுமியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக சீமான் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதே போல் சீமானுக்கு எதிரான புகாரை திரும்ப பெறுவதாக விஜயலட்சுமியும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். இருதரப்பும் பரஸ்பரம் மன்னிப்பு கோரியதையடுத்து சீமானுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், விஜயலட்சுமிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பேசிய வீடியோக்களை நீக்கவும் சீமான தரப்பு நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளனர். பல ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து முடிவுக்கு வந்துள்ளது.