எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வரா? நயினார் நாகேந்திரன் கனவு பலிக்காது: டிடிவி தினகரன் சாடல்!

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கிவிடலாம் என்ற நயினார் நாகேந்திரனின் கனவு ஒருபோதும் பலிக்காது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சோளிங்கரில் உள்ள ஸ்ரீ வாசவி திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் என்.ஜி.பார்த்திபன் தலைமையில் அமமுகவின் செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஆலோசனைகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் எடப்பாடி பழனிசாமி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அதிமுக இயக்கத்தை எம்ஜிஆர் உருவாக்கினார். ஆனால் அதை முழுமையாக மூடிவிட்டு ’எடப்பாடி திராவிட முன்னேற்ற கழகம் என பெயர் வைக்கும் வகையில் அதிமுக செயல்பட்டு வருகிறது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எத்தனை அடிமைகள் ஒன்றிணைந்து வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஊர்ந்து வந்து ஆட்சியை பிடித்துவிடுவோம் என நினைத்து கொண்டிருக்கிறார்” என்றார்.
தொடர்ந்து அதிமுக - பாஜக கூட்டணி குறித்து கேட்டதற்கு, “தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க முடியாது. இது அவர்களுக்கே தெரியும். அதனால், தான் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் அலட்சியமாக தமிழகத்துக்கு நிதி வழங்குகிறது. 2026இல் எடப்பாடி பழனிசாமியை தமிழகத்தின் முதல்வராக்க விரும்பும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் கனவு, ஒருபோதும் பலிக்காது.
மத்தியில் உள்ள பாஜக, தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஆசையில் பல்வேறு திட்டங்களை அறிவிக்கிறது. ஆனால் அதனை முறையாக ஏழை, எளிய மக்களுக்கும் சென்றடையும் வகையில் வழிவகை செய்ய வேண்டும். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் நாங்கள் கூட்டணி வைக்கும் கட்சிதான் நிச்சயம் வெற்றி பெறும். சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் என்.ஜி. பார்த்திபன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் அம்மாவின் ஆசிர்வாதத்தோடு வெற்றி பெறுவார்” என்றார்.
கரூர் துயர சம்பவம் குறித்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது குறித்து கேட்டதற்கு, “கரூரில் நடைபெற்ற துயர சம்பவம் வேதனை அளிக்கிறது. இதற்கு யார் காரணம் என்பதை சிபிஐ விசாரணை செய்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். இந்த சம்பவத்தில் எந்தவிதமான சூழ்ச்சிகளும் இடம்பெறவில்லை. ஆனால் இதனை சில அரசியல் கட்சிகள் அரசியலாக்க நினைக்கிறது. உண்மை தெரிய வந்தால் தான் அனைவருக்கும் நிம்மதி வரும்” என தெரிவித்தார்.