சேற்றில் சிக்கிய காட்டு யானையை போராடி மீட்ட கோவை வனத்துறை

சேற்றில் சிக்கிய காட்டு யானையை போராடி மீட்ட கோவை வனத்துறை

சேற்றில் சிக்கிய காட்டு யானையை மதுக்கரை வனத்துறையினர் கிரேன் உதவியுடன் மீட்டு, வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விட்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட குப்பனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய வயதான பெண் யானை ஒன்று அப்பகுதியில் சுற்றி வந்தது. உணவு தேடி குடியிருப்புப் பகுதி அருகே அந்த யானை வந்தபோது அங்குள்ள கழிவுநீர் தேங்கி இருந்த சேற்றில் சிக்கியது. இதுகுறித்து மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அந்த தகவலின் பேரில் வனச்சரகர் அருண்குமார் தலைமையிலான வனத்துறையினர் அங்கு வந்து, யானைக்குத் தேவையான முதலுதவி மற்றும் மருத்துவ சிகிச்சைகளை உடனடியாக வழங்கினர். வயதான யானை எழுந்து நிற்க முடியாத நிலையில் இருந்ததால், 'கிரேன்' (Crane) உதவியுடன் அது பாதுகாப்பாகத் தூக்கி நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து இன்று காலை வரை வனத்துறையினர் யானையைத் தீவிரமாகக் கண்காணித்து, அதற்குத் தேவையான மருந்துகள் மற்றும் குளுக்கோஸ் வழங்கி சிகிச்சை அளித்து வந்தனர்.

சிகிச்சைக்குப் பிறகு யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, வனத்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவுபடி காலை 7 மணியளவில் யானையைத் தாங்கிப் பிடித்திருந்த கயிறுகள் விடுவிக்கப்பட்டன. பின்னர் அந்த யானை சுயமாக நடக்கும் நிலைக்குத் திரும்பியபின், போலாம்பட்டி பிளாக்-1 காப்புக்காடு, அய்யாசாமி கோயில் வனப்பகுதிக்குள் நல்ல நிலையில் நுழைந்தது. தொடர்ந்து தனி குழுவினர் அந்த யானையை கண்காணித்து வருகின்றனர்.

யானை மீட்கப்பட்டது குறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், "சேற்றில் யானை சிக்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று யானையின் நிலையை கண்டறிந்தனர். உடனே கால்நடை மருத்துவர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர்.யானைக்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊட்டச்சத்து மிக்க பழங்கள் வழங்கப்பட்டன.

யானை இயல்பு நிலைக்கு திரும்பிய பின், கிரேனில் இருந்து விடுவிக்கப்பட்டது. பின்னர் அந்த யானை சுயமாக நடந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளது. தொடர்ந்து வேட்டை தடுப்பு காவலர்கள் யானையை கண்காணித்து வருகின்றனர்” என தெரிவித்தார்.