பிஹார் தொழிலாளி, அவரது மனைவி, குழந்தை கொலை: தலைவர்கள் கண்டனம்
பிஹார் தொழிலாளி, அவரது மனைவி, 2 வயது ஆண் குழந்தை ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை தரமணியில் பிஹார் இளைஞர், அவரது மனைவி, 2 வயது குழந்தை ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக, அவரது நண்பர்களை போலீஸார் கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தரமணி பகுதியில் பிஹார் மாநில இளைஞர், அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஆகிய மூவரும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சில நாட்களுக்கு முன்புதான் திருத்தணியில் மகாராஷ்டிர இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் நடந்தது. தற்போது ஒரு வடமாநில குடும்பம் மொத்தமாக கொல்லப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ்: இக்கொலைக்கு அடிப்படைக் காரணம் மது. அண்மையில் தஞ்சையில் நடைபெற்ற திமுக மகளிர் மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கியதால்தான் தமிழகத்தில் அதிக அளவிலான பெண்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றுகிறார்கள் என்றார்.
அப்படி சொன்ன மறுநாளே கொடூர கொலை நடந்துள்ளது. வேலை கேட்டு நம்பி வந்த குடும்பத்தை நம்பிக்கை துரோகம் செய்து மதுபோதையில் கொன்றதாக கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். பெண்கள் அச்சமின்றி வாழ இனியாவது மதுவை அறவே ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ள கொடூர மனம் படைத்தவர்கள் அனைவரையும் கைது செய்து, இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாத அளவுக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழகத்தில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு செயலற்று கிடைக்கிறது. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி காலதாமதமின்றி அதிகபட்ச தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்.
தவாக தலைவர் வேல்முருகன்: இந்த வழக்கில் தொடர்புடையதாக பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், ஒரு தனிப்பட்ட குற்றம் அல்ல. இது பாதுகாப்பற்ற அரசு அமைப்புகளின் அலட்சியத்தின் விளைவு. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.