எஸ்.ஐயை வெட்டிவிட்டு தப்ப முயற்சி' - பிரபல ரவுடியை சுட்டுப் பிடித்த போலீஸ்
திண்டுக்கல் மாவட்டம், சவேரியார் பாளையம் பகுதியில் ஒரு கொலை திட்டத்தை முறியடிக்கும் விதமாக போலீசார் செயல்பட்டனர். அப்போது எஸ்.ஐயை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் செல்ல முயன்ற பிரபல ரவுடியை போலீசார் வலது காலில் சுட்டு பிடித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தற்போது காயம் அடைந்த எஸ்.ஐ மற்றும் ரவுடிக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் மீது, மூன்று கொலை வழக்குகள் உள்பட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் விக்னேஸ்வரன் மேலும் ஒருவரை கொலை செய்வதற்கு திட்டமிட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் பேரில் திண்டுக்கல், சவேரியார் பாளையம் அருகே உள்ள சிகேசிஎம் காலனியில் உள்ள வீட்டிற்கு இன்று ஜனவர் 11 ஆம் தேதி மாலை திண்டுக்கல் நகர் டிஎஸ்பி கார்த்திக் தலைமையில் போலீசார் சென்றனர். பின்னர் போலீசார் அவரை விசாரணைக்காக காவல் நிலையம் வரை வருமாறு அழைப்பு விடுத்தனர்.
அப்போது விக்னேஸ்வரன் போலீசாருடன் செல்ல மறுத்து, கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென வீட்டில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அருகில் நின்றிருந்த எஸ்.ஐ ஜான்சன் மீது வீச அவரது இடது கையில் வெட்டு விழுந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விக்னேஸ்வரன் போலீசிடம் இருந்து தப்பியோட முயன்றபோது உடனடியாக டிஎஸ்பி கார்த்திக் சுதாரித்துக் கொண்டு தற்காப்புக்காக தனது துப்பாக்கியால் விக்னேஸ்வரனை நோக்கி சுட்டுள்ளார். இதில் வலது கால் முட்டியில் குண்டு பாய்ந்து விக்னேஸ்வரன் மயங்கி விழுந்தார். உடனே மற்ற போலீசார் பாய்ந்து சென்று, விக்னேஸ்வரனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இதில் பலத்த காயமடைந்த எஸ்.ஐ ஜான்சன் மற்றும் விக்னேஸ்வரனை திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அங்கு தற்போது இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.