SIR படிவத்தை சமர்ப்பிக்க டிசம்பர் 4-ம் தேதி தான் கடைசி; கூடுதல் அவகாசத்திற்கு வாய்ப்பில்லை - தேர்தல் அதிகாரி திட்டவட்டம்

SIR படிவத்தை சமர்ப்பிக்க டிசம்பர் 4-ம் தேதி தான் கடைசி; கூடுதல் அவகாசத்திற்கு வாய்ப்பில்லை - தேர்தல் அதிகாரி திட்டவட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த படிவத்தை டிசம்பர் 4-ம் தேதிக்குள் விண்ணப்பித்து வழங்கிட வேண்டும் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், "இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, எஸ்.ஐ.ஆர்., பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை 6.16 கோடி வாக்காளர்களுக்கு BLO-க்கள் விண்ணப்பங்களை கொடுத்துள்ளனர். டிசம்பர் 4ம் தேதி வரை இந்த விண்ணப்பங்கள் பெறப்படும். பெறப்பட்ட அந்த விண்ணப்பங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படும். இதுவரை 50 சதவீத விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றை டிஜிட்டல் முறைக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.'' என்றார்.

நான்கு பிரிவுகளாக மாதிரி வாக்காளர் பட்டியல் வெளியாகும்

தொடர்ந்து பேசிய அவர், '' எந்த ஒரு வாக்காளரையும் விசாரிக்காமல் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முடியாது. மாதிரி வாக்காளர் பட்டியலானது நான்கு பிரிவுகளாக வெளியிடப்படும். அதில் இறப்பு, விண்ணப்பம் வழங்காதோர், நிரந்தரமாக இடம்பெயர்ந்தோர், போலி வாக்காளர் அட்டை வைத்திருப்போர் ஆகிய பிரிவுகளாக பட்டியல் வெளியாகும். அதேபோல, விண்ணப்பத்தை வாங்காதோர் என்ற பட்டியலும் வெளியிடப்படும்.

இந்தப் பணியில் என்னுடன் சேர்த்து 83,256 அதிகாரிகள் உள்ளனர். 33,000 தன்னார்வலர்கள் உள்ளனர், அவர்கள் நன்றாக ஒத்துழைப்பு வழங்கினார்கள். அத்துடன், 2,45,340 அரசியல் கட்சி முகவர்கள் பங்கேற்றுள்ளனர். எந்த தகுதி உள்ள வாக்காளர்களும் வெளியே செல்லக்கூடாது, ஒவ்வொருவரும் இணைக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் இவ்வளவு பேர் முயற்சி எடுத்து வருகிறோம்.

தமிழ்நாட்டின் எஸ்ஐஆர் பணியில் 68,467 BLOக்கள் உள்ளனர். இவர்களில் 327 BLOக்கள் 100 சதவீதம் அவர்களின் வேலைகளை முடித்துவிட்டார்கள். பொதுமக்கள் அவரவர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து திரும்பக் கொடுத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இப்போதைக்கு, டிசம்பர் 4 ஆம் தேதிக்கு பிறகு கூடுதல் அவகாசம் வழங்க வாய்ப்பில்லை, அதற்குள்ளாகவே முடிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் 2 லட்சம் விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது.'' என தெரிவித்தார்.

வெளிமாநிலத்தவர்கள் 429 பேர் விண்ணப்பம்

BLO-க்களை திமுகவினர் கட்டுப்படுத்துகிறார்களா? என்ற கேள்விக்கு,'' எங்கள் BLO-க்கள் சுதந்திரமாக இயங்குகிறார்கள். அவர்கள் மீது யாரும் தாக்கம் செலுத்த முடியாது. வெளிமாநிலங்களில் இருந்து இங்கு தங்கி இருப்பவர்கள் விண்ணப்பம் 8 (Form 8) வழங்க வேண்டும். இப்போது வரை 429 விண்ணப்பங்கள்தான் வந்துள்ளன. தகுதியுள்ள எந்த வாக்காளரும் சரியான காரணம் இல்லாமல் நீக்கப்படமாட்டார்கள் என்ற அவரிடம், எத்தனை வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள்? என்ற கேள்விக்கு, எல்லாம் முடிந்த பிறகுதான் முழுமையாகச் சொல்ல முடியும்'' என்றார்.