சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மீண்டும் கேப்டனானார் கம்மின்ஸ்
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் தொடர்வார் என்று அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 19ஆவது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் வருகிற டிசம்பர் 16 ஆம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்பாக அணிகள் தங்களுடைய தக்கவைத்த மற்றும் விடுவிடுத்த வீரர்களின் பட்டியலை கடந்த நவம்பர் 15ஆம் தேதி அறிவித்திருந்தது. இதிஉல் சில அணி டிரேடிங் முறையிலும் ஏலத்திற்கு முன்னதாகவே வீரர்களை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
அதில் முக்கியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கடந்த சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சஞ்சு சாம்சனை ரூ.18 கோடிக்கு டிரெடிங் செய்துள்ளது. மேலும் சஞ்சுவுக்கு பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிஎஸ்கே ஆல் ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜாவை ரூ.14 கோடிக்கும், சாம் கரணை ரூ.2.4 கோடிக்கும் டிரேடிங் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ரூ.10 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் டிரேடிங் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த ஐபிஎல் சீசன் வீரர்கள் மெகா ஏலத்தில் ரூ.10 கோடிக்கு ஷமியை ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், தற்சமயம் அதே தொகைக்கும் லக்னோ அணியிடம் டிரேடிங் செய்துள்ளனர்.
மேலும், அனைத்து அணிகளும் அடுத்த சீசனில் தங்களது அணிக்கான பயிற்சியாளர்கள், உதவிப் பயிற்சியாளர்கள் மற்றும் புதிய கேப்டன்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் தங்களுடைய கேப்டன் யார் என்பதை அறிவித்துள்ளது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அடுத்த சீசனிலும் பாட் கம்மின்ஸ் கேப்டனாக வழிநடத்துவார் என அந்த அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு வீரர்கள் மினி ஏலத்தின் போது ரூ.20.50 கோடி என்ற இமாலய தொக்கு பாட் கம்மின்ஸை வாங்கிய அந்த அணி, அவரை கேப்டனாகவும் நியமித்திருந்தது. அவர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியானது 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையிலும், கேகேஆர் அணியுடனான இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.
அதன்பின் கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணியின் ஆட்டம் பெரிதளவில் எடுபடாததுடன், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்திருந்தது. இதனால் அடுத்த ஐபிஎல் சீசனில் அணியின் கேப்டன் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், பாட் கம்மின்ஸ் அடுத்த சீசனிலும் கேப்டனாக தொடர்வார் என்பதை அந்த அணி நிர்வாகம் உறுதிப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
தக்கவைத்த வீரர்கள்: அபிஷேக் சர்மா, அனிகேத் வர்மா, பிரைடன் கார்சே, எஷான் மலிங்கா, ஹர்ஷ் துபே, ஹர்ஷல் படேல், ஹென்ரிச் கிளாசென், இஷான் கிஷன், ஜெய்தேவ் உனட்கட், கமிந்து மெண்டிஸ், நிதிஷ் குமார் ரெட்டி, பாட் கம்மின்ஸ், ஆர் ஸ்மரன், டிராவிஸ் ஹெட், ஜீஷன் அன்சாரி
விடுவிக்கப்பட்ட வீரர்கள்: முகமது ஷமி (டிரேடிங்), அதர்வா டைடே, சச்சின் பேபி, அபினவ் மனோகர், வியான் முல்டர், ஆடம் ஜம்பா, சிமர்ஜீத் சிங், ராகுல் சாஹர்