நடிகை லெட்சுமி அம்மாள் காலமானார்!

நடிகை லெட்சுமி அம்மாள் காலமானார்!
பருத்திவீரன் படத்தில் 'ஊரோரம் புளியமரம்' பாடல் பாடிய கிராமிய பாடகி லெட்சுமி அம்மாள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
பருத்தி வீரன் திரைப்படம் வந்தபோது தென் தமிழகத்தில் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தப் படம் தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரை சுற்றுவட்டார கிராம மக்களின் வாழ்வியலை மண் மணம் மாறாமல் காட்டியது. இதற்குப் பெரும் பங்கு அந்தப் படத்தில் இடம் பெற்ற நாட்டுப்புறப் பாடல்களுக்கும் உண்டு.
இன்றும் தென் மாவட்டத் திருவிழாக்களில் தவறாமல் இடம் பிடிக்கும் அந்தப் பாடல்களைப் பாடியவர் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த லட்சுமி பாட்டி. பாடியதோடு மட்டும் இல்லாமல் அந்தப் பாடலில் நடித்ததன் காரணமாக அந்தச் சமயத்தில் பட்டி தொட்டியெங்கும் பருத்திவீரன் லெட்சுமி எனப் புகழ்பெற்றார்.
மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரத்தில் பிறந்த லெட்சுமி பிறந்ததில் இருந்தே நாட்டுப்புறப் பாடல்களை தனது அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்டு தொடர்ந்து கோவில் திருவிழாக்களில் பாடி வந்ததாகவும் அப்போது ஒருமுறை மதுரையில் பாடியபோது இயக்குனர் அமீர் தன்னை அழைத்து சென்று படத்தில் பாட வைத்ததாகவும் கூறப்படுகிறது.
அந்தப் படத்தின் மூலமாகத்தான் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. இதனால் கோவில் திருவிழாக்களில் அவருக்கு வரவேற்பு இருந்தது. கடந்த சில வருடங்களாக வயது முதிர்வின் காரணமாக அவரால் நடக்க முடியவில்லை. இதனால் வெளியில் செல்ல முடியாமல் முடங்கியிருந்தார்.
லெட்சுமி அம்மாள் பிறவியிலேயே மாற்றுத்திறனாளி. இந்த நிலையில் தான் லெட்சுமி அம்மா உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 75. சில ஆண்டுகள் முன் உடல் நலம் குன்றியிருந்த போது தான் பெற்ற பிள்ளைகள் கூலி வேலைக்குச் செல்பவர்கள் என்பதால் சரியான வருமானம் இல்லை எனக் கூறி அரசாங்கத்திடம் உதவி கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.