ராமாயணம் படத்துக்கு இசையமைப்பது குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘ராமாயணம்’. இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், சன்னி தியோல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இசையமைக்கின்றனர். பெரும் பொருட்செலவில் தயாராகி வரும் இந்தப் படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
இந்நிலையில் அண்மையில் ஆங்கில ஊடகத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பேட்டியில் ராமாயணத்துக்கு இசையமைப்பது குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், “நான் பிராமண பள்ளியில் படித்தேன். அங்கே ஒவ்வொரு ஆண்டும், ராமாயணம், மகாபாரதம் பாடங்களாக இருக்கும். அதன் மூலம் எனக்கு அந்த கதைகள் நன்றாக தெரியும். ஒருவர் எப்படி நல்லொழுக்கத்துடன் இருக்கிறார், உயர் லட்சியங்களை கொண்டிருக்கிறார் உள்ளிட்ட பல விஷயங்கள் அதில் இருக்கும்.
மக்கள் அது குறித்து விவாதம் செய்யலாம், ஆனால், நான் கற்றுகொண்ட நல்ல விஷயங்களுக்கு மதிப்பளிக்கிறேன். நீங்கள் எங்கிருந்து கற்றுக்கொண்டாலும், அறிவு விலைமதிக்க முடியாதது ஒன்று என இறைத்தூதர் கூறியுள்ளார். அரசன், யாசகர் கேட்பவர், நல்லவர், கெட்டவர் என யாராக இருந்தாலும், அவர்களிடமிருந்து நீங்கள் நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள தயக்கம் காட்ட கூடாது” என்றார்.