ஒருநாள், டி20 தொடர்களுக்கான அணிகளை அறிவித்தது கிரிக்கெட் ஆஸ்திரேலியா; இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு அணிகளின் கேப்டனாகவும் மிட்செல் மார்ஷ் செயல்படவுள்ளார்.
இந்திய அணி இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் அக்டோபர் 19ஆம் தேதியில் இருந்தும், அதனைத் தொடர்ந்து டி20 தொடரானது அக்டோபர் 29ஆம் தேதியும் தொடங்க உள்ளது. இந்த நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது.
இதில் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா, கேப்டன் பதவியில் இருந்து அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் ஒருநாள் அணியின் துணைக் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் அணியில் சாதாரண வீரர்களாக மட்டுமே இடம் பிடித்துள்ளனர்.
மறுபக்கம் டி20 அணியைப் பொறுத்தவரையில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவு, ஷுப்மன் கில் துணைக்கேப்டனாகவும் தொடர்கின்றனர். இந்த அணியில் சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, ரிங்கு சிங், அபிஷேக் சர்மா, திலக் வர்மா ஆகியோர் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ள நிலையில், நிதிஷ் ரெட்டிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இம்முறையும் டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் அணியின் கேப்டனாக மிட்செல் மார்ஷ் தொடர்கிறார். அதேசமயம் அணியின் நட்சத்திர வீரர்களான பாட் கம்மின்ஸ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் காயம் காரணமாக இந்திய தொடரில் இருந்து விலகியுள்ளனர். முன்னதாக இவர்கள் இருவரும் நியூசிலாந்து டி20 தொடரிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மார்னஸ் லபுஷாக்னே ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கு நிலையில், அறிமுக வீரர் மேத்யூ ரென்ஷா அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார். இதுதவிர்த்து, கேமரூன் க்ரீன், மிட்செல் ஸ்டார்க் ஆகியோரும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளனர். அவர்களுடன் மிட்செல் ஓவன், மேத்யூ ஷார்ட் ஆகியோரும் இடங்களைத் தக்கவைத்திருக்கும் நிலையில், ஆரோன் ஹார்டி, மேத்யூ குன்னமென் ஆகியோர் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
டி20 அணியைப் பொறுத்தவரையில் காயத்தில் இருந்து மீண்டிருக்கும் ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோர் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளனர். அதேசமயம் கடந்த நியூசிலாந்து தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் விளையாடிய டிராவிஸ் ஹெட் மற்றும் ஜோஷ் பிலிப் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுதவிர்த்து, டிம் டேவிட், மிட்செல் ஓவன், சீன் அபோட், டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஆடம் ஜாம்பா உள்ளிட்டோர் தன்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.