விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளம் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்!
இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த இளம் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமழிசை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் முருகேஸ்வரி (23). இவர் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி அதிகாலை 6.30 மணி அளவில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் கீழே விழுந்து தலைக்காயம் அடைந்தார்.
தொடர்ந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. பிறகு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் அவசர விபத்து சிகிச்சைப்பிரிவில் உள்நோயாளியாக கடந்த நவம்பர் 22 ஆம் தேதி பிற்பகல் 01.45 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். தலைக்காயப் பிரிவில் தீவிர சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அதிகாலை 12.50 மணிக்கு முருகேஸ்வரி மூளைச்சாவடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவரது உறவினர்கள் உடல் உறுப்புதானம் செய்ய முன் வந்து அவரது தந்தை சுப்ரமணியனிடம் ஒப்புதல் பெறப்பட்டது.
திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கல்லீரலும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிறுநீரகங்கள், கருவிழிகள் மற்றும் தோலும் வழங்கப்பட்டன.
இது குறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் டாக்டர் அருள் சுந்தரேஸ் குமார் கூறுகையில், "இறந்த இளம் பெண்ணின் உடல் தீவிர விபத்து சிகிச்சைப் பிரிவில் உடற்கூராய்வு செய்யப்பட்டு உரிய மரியாதையுடன் அவரது குடும்பத்தாரிடம் காவல்துறையின் மூலம் ஒப்படைக்கப்பட்டது. மேற்கண்ட நோயாளியின் உறவினர்களுக்கும், காவல் துறைக்கும் அரசு ராஜாஜி மருத்துவமனை சார்பாக எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த உடல் உறுப்பு தானத்தால் ஆறு நபர்கள் பயன் பெற்றுள்ளனர். உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை செய்வதற்காக சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திடம் பெண்ணின் உடல் உரிய மரியாதையுடன் அனுப்பி வைக்கப்பட்டது' என்றார்.
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட உடல் உறுப்பு தானம் செய்வதில் தமிழ்நாடு முன்னிலையில் இருந்து வருகிறது. குறிப்பாக, உடல் உறுப்பு தானம் செய்வோரை மரியாதை செய்யும் விதமாக, அவர்களின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.