பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட்: ரூ.3.20 கோடிக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா

பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட்: ரூ.3.20 கோடிக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா

5 அணிகளும் தங்களுக்கு தேவையான வீராங்கனைகளை குறி வைத்து ஏலம் கேட்டனர்.

புதுடெல்லி, 4-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவிமும்பை மற்றும் வதோதராவில் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி முதல் பிப்ரவரி 5-ந் தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு வீராங்கனைகள் ஏலம் டெல்லியில் நேற்று நடந்தது.

ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்று இருந்தனர். பிரபல ஏலதாரர் மல்லிகா சாகர் ஏலத்தை நடத்தினார். போட்டியில் பங்கேற்கும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்பட 5 அணிகளும் தங்களுக்கு தேவையான வீராங்கனைகளை குறி வைத்து ஏலம் கேட்டனர். 

சமீபத்தில் நடந்த 50 ஓவர் பெண்கள் உலகக் கோப்பை போட்டியில் தொடர்நாயகி விருது பெற்ற இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மாவை வாங்க அதிக போட்டி நிலவியது.ரூ.50 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருந்த அவரை வாங்க டெல்லி அணி கடைசி வரை மல்லுக்கட்டிய நிலையில் உ.பி.வாரியர்ஸ் ஏற்கனவே தங்கள் அணிக்காக ஆடிய தீப்தி ஷர்மாவை ஆர்.டி.எம். கார்டு என்னும் சிறப்பு சலுகையை பயன்படுத்தி ரூ.3.20 கோடிக்கு தங்கள் வசப்படுத்தியது.

இதன் மூலம் பெண்கள் பிரிமீயர் லீக் போட்டி வரலாற்றில் அதிக தொகைக்கு விலை போன 2-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.