அடுத்த வருடம் இந்தியாவிற்கு விசிட்? - மோடியுடனான நட்பு குறித்து டிரம்ப் பெருமிதம்
இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் சிறப்பாக போய்க் கொண்டிருப்பதாகவும், அடுத்த ஆண்டு தான் இந்தியாவிற்கு வர வாய்ப்பிருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் அமைந்துள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் டிரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அ்ப்போது அவரிடம் இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் மற்றும் மோடியுடனான உறவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிரம்ப், மோடியை வெகுவாக புகழ்ந்தார்.
அவர் பேசும்போது, “இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை சிறப்பாக போய்க் கொண்டிருக்கிறது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை மோடி பெரும்பாலும் நிறுத்திவிட்டார். மோடி என்னுடைய நண்பர். நாங்கள் அடிக்கடி பேசுகிறோம். நான் இந்தியாவிற்கு வர வேண்டுமென அவர் விரும்புகிறார். ஏற்கெனவே பிரதமர் மோடியுடன் ஒரு சிறந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறேன். அவர் ஒரு சிறந்த மனிதர்” என்றார்.
அவரிடம் அடுத்த ஆண்டு இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? என கேட்டதற்கு, “ஆம், செல்ல வாய்ப்பிருக்கிறது” என்று டிரம்ப் பதிலளித்தார்.
அத்துடன் இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சண்டையை தான் தலையிட்டு, 24 மணி நேரத்தில் நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் தெரிவித்தார்.
"நான் முடிவுக்கு கொண்டுவந்த 8 சண்டைகளில் 5 அல்லது 6 சண்டைகளை வரிவிதிப்பை காரணங்காட்டி முடிவுக்கு கொண்டு வந்தேன். உதாரணத்திற்கு, இந்தியா - பாகிஸ்தான் சண்டையை எடுத்துக் கொள்ளுங்கள். 2 நாடுகளுமே அணு ஆயுத சக்திமிக்க நாடுகள். அவை இரண்டுமே ஒன்றையொன்று சுட்டுக் கொண்டிருந்தன. இந்த சண்டையில் 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அப்போது நான் தலையிட்டு, ‘நீங்கள் சண்டையிட்டுக் கொண்டே இருந்தால் இரு நாடுகள் மீதும் வரிகளை விதிக்கப் போகிறேன்’ என்று கூறினேன். அவர்களுக்கு அதில் விருப்பம் இல்லை என்பதால் உடனடியாக சண்டையை நிறுத்திவிட்டனர். இப்படி 24 மணி நேரத்தில் போரை நிறுத்தினேன்” என்று கூறினார்.