நிதி முடக்கத்தால் திணறும் அமெரிக்க அரசு! 1000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
அமெரிக்க அரசாங்கத்தின் கட்டாய பணிநிறுத்தம் காரணமான 1000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
அமெரிக்க அரசின் துறைகளுக்கான நிதி முடக்கத்தால், அரசுக்கு சொந்தமான விமான நிறுவனம் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் திணறி வருகிறது. இந்த நிலைமையை ஒருவாறு சரி செய்ய, ஊழியர்கள் கட்டாய விடுப்பில் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதனால் அங்கு விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, நியூயார்க், அட்லாண்டா, டென்வர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் 10 சதவீத விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 1000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இவற்றில் பல விமானங்கள் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டதாலும், வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டதாலும் பயணிகள் பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாகினர்.
நிதி முடக்கம் தொடரும்பட்சத்தில், ஊழியர்களுக்கான பணி நிறுத்தம் 15-ல் இருந்து 20 சதவீதமாக உயரக் கூடும். இதனால் இன்னும் பல விமானங்களை ரத்து செய்தால், பயணிகள் மேலும் சிரமங்களை சந்திக்கக் கூடும். கடைசி நிமிட விமான ரத்தால் ஏற்கனவே பயணத்தை திட்டமிட்டிருந்த பலர் வாடகைக் கார்களில் பயணத்தை மேற்கொள்ள முயற்சித்தும் அதுவும் தோல்வியில் முடிந்ததாக பல பயணிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
உலகின் வல்லரசு நாடுகளின் ஒன்றான அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதத்தில் டொனால்டு டிரம்ப் அதிபராக பதவியேற்றார். அப்போதிருந்தே பல்வேறு அதிரடியான முடிவுகளை எடுத்து உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறார். அதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. என்ன தான் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்த சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுவதாக அவர் அறிவித்தாலும், சில முடிவுகள் அமெரிக்கர்களுக்கே பிரச்சினையாக மாறி வருகிறது.
பல்வேறு உலக நாடுகளுக்கு டிரம்ப் அதிகப்படியான வரி விதித்ததன் எதிரொலியாக, அமெரிக்காவில் பல்வேறு பொருட்களுக்கு விலை ஏறி இருக்கிறது. இந்த பிரச்சினை ஒருபுறம் இருக்க, அரசு செலவுக்கான நிதியை விடுவிப்பதில் அங்கு சிக்கல் எற்பட்டிருக்கிறது. அமெரிக்காவை பொருத்தவரை அரசு செலவுக்கான நிதியை விடுவிப்பதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் இந்த நிதி ஆண்டுக்கான வரையறை மீதான விவாதத்தில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சிகளுக்கிடையே ஒப்புதல் ஏற்படவில்லை.
இதனால் அமெரிக்க அரசு பல்வேறு துறைகளுக்கான நிதியை முடக்கியிருக்கிறது. நிதி குறைபாட்டால் அமெரிக்காவில் முக்கிய துறைகளைச் சேர்ந்த பல்வேறு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த அக்டோபர் 1 ஆம் தேதியிலிருந்து நிதி முடக்கப்பட்டிருக்கும் நிலையில், சுமார் 6.70 லட்சம் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் இருப்பதாகவும், 7.30 லட்சம் பேர் சம்பளமின்றி வேலை செய்து வருவதாகவும் அங்குள்ள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.