பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்காததற்கு அன்புமணி கண்டனம்

பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்காததற்கு அன்புமணி கண்டனம்

 "தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் காலாவதியாகி இன்றுடன் ஒரு வாரம் ஆகும் நிலையில், அந்த ஆணையத்தை அமைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. திமுக ஆட்சி சமூகநீதியின் இருண்ட காலம்" என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் காலாவதியாகி இன்றுடன் ஒரு வாரம் ஆகும் நிலையில், இன்று வரை புதிய ஆணையத்தை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி வன்னியர் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைத்தல், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துதல் உள்ளிட்ட ஏராளமான பணிகள் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு காத்துக் கிடக்கும் நிலையில், அந்த ஆணையத்தை அமைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோரின் நலன்களைக் காப்பதில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. தமிழ்நாட்டில் 1990ஆம் ஆண்டுகளுக்கு முன்பாக சட்டநாதன் தலைமையிலும், அம்பாசங்கர் தலைமையிலும் இரு ஆணையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அதன்பின் 1990ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு இதுவரை 15 ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரு வகையான ஆணையங்களும் ஒரே மாதிரியான நோக்கம் கொண்டவை என்றாலும் கூட, அவை இரண்டும் அமைக்கப்பட்ட முறைகள் முற்றிலும் வேறுபட்டவையாகும்.

முதலில் அமைக்கப்பட்ட இரு ஆணையங்களும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்ற தேவைக்காக அமைக்கப்பட்டவையாகும். அவற்றின் பணி முடிந்தவுடன் அந்த ஆணையங்கள் காலாவதியாகிவிடும். அவற்றுக்கு உறுதி செய்யப்பட்ட பதவிக்காலம் கிடையாது.

ஆனால், 1990களுக்குப் பிறகு அமைக்கப்பட்ட ஆணையங்களுக்கு உறுதி செய்யப்பட்ட பதவிக்காலங்கள் உண்டு. அந்த ஆணையங்கள் 1992ஆம் ஆண்டு இந்திரா சகானி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் அமைக்கப் பட்டவை ஆகும். இந்த ஆணையங்கள் நிரந்தர ஆணையங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதனால், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஒரு வாரத்திற்கும் மேலாக காலியாக இருப்பதை ஏற்க முடியாது.

அதன்பின் ஆணையத்தின் பதவிக்காலம் கடந்த 16ஆம் தேதி நிறைவடையும் வரை 1040 நாள்களாகிவிட்ட போதிலும் ஆணையம் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை. அந்த வகையில் பதவிக்காலம் முடிவடைந்த ஆணையம் பயனற்ற ஆணையம் தான்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட ஏராளமான சமூகநீதிக் கடமைகளை நிறைவேற்ற தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கட்டாயத் தேவை ஆகும். இதை உணர்ந்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை திமுக அரசு உடனடியாக அமைக்க வேண்டும். அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக சமூகநீதியில் அக்கறை கொண்ட, சமரசம் செய்யும் குணம் இல்லாதவர்களை தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.