பேராசிரியர் காலி பணியிடம்: உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் உறுதி

அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர் காலி பணியிடங்கள் இல்லை என்ற நிலையை எட்டுவதற்கான முயற்சிகளை உயர் கல்வித் துறை எடுத்து வருவதாக தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற முதல்வர் கோப்பை மாநில அளவிலான பள்ளி மாணவிகளுக்கான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற நாமக்கல் மாவட்ட அணிக்கு ரூ.13.50 லட்சம் பரிசுத் தொகைக்கான காசோலை, 2, 3-வது இடங்களை முறையே பெற்ற திருவாரூர் மாவட்ட அணிக்கு ரூ.9 லட்சம், தென்காசி மாவட்ட அணிக்கு ரூ.4.50 லட்சம் காசோலைகளை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் புதிதாக 34 அரசுக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. 64 கல்லூரிகளில் 2 ஷிப்ட் முறை, புதிய பாடத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான ஆசிரியர்கள் தேவையை உணர்ந்து 2,703 பேரை நிரந்தர அடிப்படையில் பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கவுரவ விரிவுரையாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு மாதத்துக்குள் 2,700 நிரந்தர பேராசிரியர்களை நியமிக்க டிஆர்பி மூலம் தேர்வு நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர் காலி பணியிடங்கள் இல்லை என்ற எல்லையை எட்டுவதற்கான முயற்சிகளை உயர் கல்வித் துறை எடுத்து வருகிறது என்றார்.
தஞ்சாவூர் எம்.பி. முரசொலி, எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம், தஞ்சாவூர் தடகள சங்கத் தலைவர் டி.கிருஷ்ணசாமி வாண்டையார், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.