தென்காசியில் அரசு வழக்கறிஞர் கொலை - போலீஸ் தீவிர விசாரணை
தென்காசியில் அரசு வழக்கறிஞர் பட்டப் பகலில் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், ஊர்மேலழகியான் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி. இவருக்கு ராஜாத்தி என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். செங்கோட்டை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வந்த முத்துக்குமாரசாமி, தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராகவும் இருந்தார். தென்காசி கூலக்கடை பஜாரில் அலுவலகம் வைத்துள்ளார்.
எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், பட்டப் பகலில் நடைபெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த சக வழக்கறிஞர்கள் தென்காசி அரசு மருத்துவமனை அருகில் திரண்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம், எஸ்.பி. எஸ்.அரவிந்த் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என உறுதியளித்தார். இதையடுத்து, வழக்கறிஞர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி முத்துகுமாரசாமி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து தென்காசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கொலையாளியை தேடி வருகின்றனர்.