திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை.. பதறியடித்து ஓடிய பயணிகள்!

திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை.. பதறியடித்து ஓடிய பயணிகள்!

சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவனந்தபுரத்தில் இருந்து எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.12696) நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று வழக்கம்போல் திருவனந்தபுரத்தில் இருந்து கிளம்பிய ரயில், இன்று காலை 08.25 மணியளவில் அரக்கோணம் அருகே மேல்பாக்கம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அப்போது, ரயிலில் B2 ஏசி பெட்டியின் என்ஜினில் இருந்து புகை வெளியேறியுள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த என்ஜின் லோகோ பைலட், துரிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தியுள்ளார். தொழில்நுட்பக் கோளாறு குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் ரயிலை ஆய்வு செய்தனர்.

அந்த ஆய்வில் சக்கரங்களுக்கு இடையே உள்ள மின் மோட்டரில் புகை எழுந்தது கண்டறியப்பட்டது. அதனை சீரமைத்த பிறகு ரயில் மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தது. இதற்கிடையே, ரயிலில் இருந்து புகை வருவதைக் கண்ட பயணிகள் பதறியடித்துக் கொண்டு ஓடினர். இதனால், ரயில் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், ரயில் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு 9 மணிக்கு அங்கிருந்து கிளம்பியது.

பயணிகளின் பாதுகாப்பே முக்கியம்

இதுகுறித்து ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, “மேல்பாக்கம் பகுதியில் திருவனந்தபுரம் - சென்னை விரைவு ரயிலிலிருந்து புகை வந்தது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரயில் குறைந்த வேகத்தில் வந்ததால், பெரியளவில் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, மின் மோட்டரில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்பக் கோளாறு விரைவில் சரிசெய்யப்பட்டது.