ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாத விவகாரம் - வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாத விவகாரம் - வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது குறித்த விவகாரத்தில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

ஆறு நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகி, நேற்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையே முதல்முறையாக உயர்மட்ட அளவில் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பேசிய ஜெய்சங்கர், “ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்துக்கு இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பு ஆப்கனின் வளர்ச்சிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் பங்களிக்கிறது. இதை மேம்படுத்த, காபூலில் உள்ள இந்திய தொழில்நுட்ப அலுவலகத்தை தூதரக அந்தஸ்துக்கு இந்தியா உயர்த்த உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என தெரிவித்தார்.

இதையடுத்துப் பேசிய அமிர் கான் முட்டகி, "சமீபத்தில் ஆப்கனிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது முதலாவதாக வந்து உதவியது இந்தியாதான். ஆப்கனிஸ்தான் இந்தியாவை நெருங்கிய நண்பராகப் பார்க்கிறது. பரஸ்பர மரியாதை, வர்த்தகம், மக்களுக்கு இடையேயான தொடர்பு ஆகியவற்றின் அடிப்படையில் உறவுகளை நாங்கள் விரும்புகிறோம். இந்தியா - ஆப்கனிஸ்தான் இடையேயான உறவை வலுப்படுத்த ஒரு ஆலோசனை செயல்முறையை உருவாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எந்த ஒரு குழுவும் எங்கள் பிரதேசத்தை மற்ற நாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்" என்று தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தையை அடுத்து, ஆப்கன் அமைச்சருடன் சேர்ந்து இந்திய வெளியுறவு அமைச்சர் செய்தியாளர் சந்திப்பை நடத்தவில்லை. எனினும், ஆப்கன் வெளியுறவு அமைச்சர் புதுடெல்லியில் உள்ள ஆப்கன் தூதரகத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது, இந்தியா - ஆப்கனிஸ்தான் உறவு, மனிதாபிமான உதவிகள், வர்த்தக வழிகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக அவர் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்புக்கு ஆண் பத்திரிகையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்தியா வந்துள்ள தலிபான் பிரதிநிதியின் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும். பெண்களுக்கான உரிமையை நீங்கள் அங்கீகரிப்பது தேர்தலுக்காக மட்டுமே என்பது உண்மையல்ல என்றால், திறமையான இந்திய பெண்களில் சிலருக்கு இந்த அவமானம் எப்படி ஏற்பட்டது? பெண்கள் இந்த நாட்டின் முதுகெலும்பு, பெருமை அல்லவா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆப்கன் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகியின் செய்தியாளர் சந்திப்பில் இருந்து பெண் பத்திரிகையாளர்கள் விலக்கப்பட்டது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட உடன், ஆண் பத்திரிகையாளர்கள் அந்த செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்திருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், டெல்லியில் ஆப்கனிஸ்தான் வெளியுறவு அமைச்சர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்ப்பில் இந்திய வெளியுறவுத்துறைக்கு எந்த பங்கும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.