தேசத்தந்தை மகாத்மாவின் கருத்து பெரிதா? கோட்சேவின் கருத்து பெரிதா? -மக்களவையில் துரை வைகோ காட்டம்
மக்களவையில் ‘வந்தே மாதரம்’ உரையின்போது, தேசத்தந்தை காந்தியடிகளின் கருத்து பெரியதா? அல்லது அவரை கொன்ற கோட்சேவின் கருத்து பெரியதா? என்று திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினர் துரை வைகோ கேள்வி எழுப்பினார்.
‘வந்தே மாதரம்’ பாடலின் 150-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், மக்களவையில் நேற்று (டிசம்பர் 8) மத்திய அரசு விவாதத்தை முன்னெடுத்தது. அவ்விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி தொடங்கிவைத்தார்.
இந்த சிறப்பு விவாதத்தில் பங்கேற்ற திருச்சி தொகுதி மதிமுக மக்களவை உறுப்பினர் துரை வைகோ, தனக்கு ஒதுக்கப்பட்ட இரவு 9:40 மணியளவில் உரையாற்றினார்.
அதன் விவரம் பின்வருமாறு:
‘வந்தே மாதரம்’ என்றால் தாயே உன்னை வணங்குகிறேன் என்று பொருள். இங்கு தாய் என்பது இந்தியத்தாயை குறிக்கிறது. ‘வந்தே மாதரம்’ என்பது ஒரு உணர்வு. விடுதலைப் போராட்டத்தின் உந்து சக்தியாக விளங்கியது. அடக்குமுறைக்கு எதிரான ஒரு போர்முழக்கமாக திகழ்ந்தது.
‘வந்தே மாதரம்’ மொழி, மதம், சாதி எல்லைகளைக் கடந்து நம் அனைவரையும் இந்தியர்களாக ஒன்றிணைக்கின்றது. வந்தே மாதரத்தை ஆங்கிலேயர்கள் தடை செய்தபோது, ஆயிரக்கணக்கான இந்துக்களும் முஸ்லிம்களும் ‘வந்தே மாதரம்; வந்தே மாதரம்’ என்று வீரமுழக்கமிட்டு தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தார்கள்.
வங்கப் பிரிவினையை எதிர்த்து இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒன்றிணைந்து எழுப்பிய வலிமை வாய்ந்த போர் முழக்கம் தான், ‘வந்தே மாதரம்’ என்று சொன்னார் மகாத்மா காந்தி.
‘வந்தே மாதரம் என்போம் - எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்’ என்ற உணர்ச்சிப் பாடலை எழுதி தமிழ்நாட்டின் வீதியெங்கும் முழங்கச் செய்தார் மகாக்கவி பாரதி.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்பிரமணிய சிவாவும் இணைந்து வந்தே மாதரம் முழக்கத்தை தமிழ்நாடெங்கும் ஒலிக்கச் செய்தனர்.
பாடலில் இருந்து நீக்கப்பட்ட சரணங்கள்
இப்பாடல் பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் 1875 ஆம் ஆண்டு நவம்பர் 7இல், முதலில் இரண்டு சரணங்களாக இயற்றப்பட்டது. இந்த முதல் இரண்டு சரணங்கள் வங்கத்தின் இயற்கை வளத்தையும், எழிலையும் வியந்து உரைக்கின்றன.
பின்னர், 1881-ஆம் ஆண்டில் பங்கிம் சந்திரர் மேலும் நான்கு சரணங்களைச் சேர்க்கிறார். இந்த நான்கு சரணங்கள் வங்க தேசத்தை, துர்க்கை அன்னையாக உருவகப்படுத்தி வணங்குகிறது.
இறுதியாகச் சேர்க்கப்பட்ட இந்த நான்கு சரணங்களால் சர்ச்சை ஏற்பட்டது. இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என்ற பல மதத்தினர் சம உரிமையுடன் வாழும் நம்நாட்டில், ஒரு குறிப்பிட்ட மதத்தின் கடவுளைப் போற்றும் பாடல் நம்நாட்டின் வாழ்த்துப் பாடலாக இருக்கக்கூடாது என்ற கருத்து நிலவியது.
அதனையொட்டி, 1937 ஆம் ஆண்டு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பண்டித ஜவஹர்லால் நேரு, டாக்டர் ராஜேந்திர பிரசாத், மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆகிய சான்றோர்கள் அடங்கிய குழுவால் முதல் இரண்டு சரணங்களில் எந்த மதக் குறிப்புகளும் இல்லை என்பதைக் கண்டறிந்து, அது மட்டும் தேசியப் பாடலாக அறிவிக்கப்பட்டது.
இந்த முடிவை எடுப்பதற்கு முன்னர், ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் நேதாஜி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், வந்தே மாதரம் பாடலின் கடைசி நான்கு சரணங்களில் பங்கிம் சந்திரர் தாய் மண்ணைத் துர்க்கை அன்னையோடு ஒப்பிடுகிறார் என்றாலும், பல்வேறு சமூகங்களைக் கொண்ட நம் நாட்டில் துர்க்கையை வணங்குவதாக வரும் வரிகளை ஏற்பதில் சிக்கல் வரும், எனவே அதைத் தவிர்ப்பது நல்லது என்கிறார்.
காந்தியா? கோட்சேவா?
“வேற்றுமையில் ஒற்றுமை” என்ற அடித்தளத்தால் உருவாக்கப்பட்ட நம் இந்தியத் திருநாட்டின் ஒற்றுமையைக் கருத்தில்கொண்டு வந்தே மாதரம் பாடலின் கடைசி நான்கு சரணங்கள் தவிர்க்கப்பட்டன.
ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் அந்தக் கடைசி நான்கு சரணங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று கூக்குரலிட்டன மதவாத சக்திகள். இதற்காக தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளைக் கடுமையாக விமர்சித்தார் கொடியவன் கோட்சே.
வந்தே மாதரம் பாடலின் சர்ச்சைக்குரிய கடைசி நான்கு சரணங்களை நீக்க வேண்டும் என்று இந்தியாவின் விடுதலைக்காக, போர்ப் படையைக் திரட்டிய நேதாஜி அவர்களின் சிந்தனை சரியா? இல்லை, பிரிவினையைப் போதிக்கும் மதவாத சக்திகளின் கருத்து சரியா?
தேசத்தந்தை மகாத்மாவின் கருத்து பெரிதா? அல்லது அவரைக் கொன்ற சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சேவின் கருத்து பெரிதா?
அன்று கோட்சே சொன்னதை இன்று அதே மதவாத சக்திகள் வலியுறுத்துகின்றன. மக்களைப் பிளவுபடுத்தும் மதவாத அரசியல் மூலம் தேர்தல் வியூகங்களை வகுக்கிறார்கள். வருகின்ற சட்டமன்றத் தேர்தலை மனதில்கொண்டு மேற்கு வங்கத்திற்கு வந்தே மாதரம் சர்ச்சை; தமிழ்நாட்டிற்கு திருப்பரங்குன்றம் சர்ச்சை.
இதன் மூலம் இந்துக்களின் ரத்தத்தாலும், இஸ்லாமியர்களின் ரத்தத்தாலும் தேர்தல் வெற்றிகளை எழுத முயற்சிக்கிறார்கள். இது ஒருபோதும் நடக்காது. நடக்கவிடமாட்டோம்.
சாதி மத வேற்றுமைகளைக் கடந்து, நாம் இந்தியர்களாக ஒன்றிணையும்போது இந்த மதவாத அரசியலுக்கு இந்தியாவில் இடமே இல்லை. இந்தியத் தாயின் இந்த மண் என்னுடையது; உன்னுடையது. ஏழை பணக்காரன், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர் என நம் அனைவருக்குமானது என்று மக்களவையில் உரையாற்றிய துரை வைகோ, “வேற்றுமையிலும் ஒன்றிணைவோம்; இந்தியர்களாக! வந்தே மாதரம்” என்று தனது உரையை நிறைவு செய்தார்.