கொல்லைப்புறமாக முதலமைச்சரானவர் இபிஎஸ்.. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

கொல்லைப்புறமாக முதலமைச்சரானவர் இபிஎஸ்.. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்  பரபரப்பு பேட்டி

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என இபிஎஸ் ஏன் வலியுறுத்தவில்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையைன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ''அதிமுக வெற்றி பெற வேண்டும், பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும் என்பது எனது நோக்கம். 2009-ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடப்பாடி பழனிசாமியை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார். 2012ல் என்னையும் பொறுப்புகளில் இருந்து நீக்கினார்.

ஆனால் அதன் பிறகு ஜெயலலிதா யாரையும் நீக்கவில்லை. அரவணைத்து சென்றார். தற்போது யார் எது பேசினாலும் உடனே நீக்கப்படுகிறார்கள். யார் கட்சியை பலவீனப்படுத்துகிறார்களோ அவரும் விரைவில் பலவீனம் அடைவார் என்பது தான் வரலாறு. 

ஜெயலலிதா ஓபிஎஸ்ஸை தான் மூன்று முறை முதல்வராக்கினார். எடப்பாடி பழனிசாமியை ஏன் ஆக்கவில்லை? என்னை அமைச்சராக்கியது எடப்பாடி பழனிசாமி என்று கூறுகிறார். நாங்கள்தான் அவரை முதலமைச்சர் ஆக்கினோம். அவர் கொல்லைப்புறமாக முதலமைச்சரானவர். இன்று 14 பேரை கட்சியிலிருந்து நீக்கி உள்ளார். கட்சிக்காக உழைத்த பலர் இங்கு வந்துள்ளார்கள். அவர்களையும் அவர் நீக்குவார். 

அதிமுகவில் இப்போது எடப்பாடி பழனிசாமியின் மருமகன் சொல்வது தான் கேட்கப்படுகிறது. கடந்த முறை 6 அமைச்சர்களுடன் நானும் சென்று பாஜக நட்புறவு வேண்டும், இயக்கம் வலிமையாக அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்று குரல் கொடுத்தோம். என்னை பாஜக அழைத்து இந்த இயக்கம் ஒன்றாக இணைய வேண்டுமே என்று சொன்னார்களே தவிர என்னை வைத்து பாஜக பிரிவினை செய்யவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி அதை கேட்கவில்லை'' என்றார்.