சென்னையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; சீனாவுக்கு தப்பிய ஆசாமி மும்பையில் கைது
சென்னையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்து விட்டு சீனாவுக்கு தப்பிய ஆசாமி மும்பை திரும்பிய போது போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியை சேர்ந்தவர் 23 வயது பெண். இவர் சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி, பெசன்ட் நகரிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 30.01.2025 அன்று காலை வேலைக்குச் செல்ல பெசன்ட் நகர், தாமோதரபுரம் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கருப்பு நிற இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்து பின்னர் இருசக்கர வாகனத்தை அப் பெண்ணின் முன்பு நிறுத்தி வண்டியில் ஏறு, எங்கு செல்ல வேண்டுமோ இறக்கி விடுகிறேன்‘ என கூறியுள்ளார்.
உடனே அந்த பெண், ''யார் நீ? எதற்காக நான் வர வேண்டும்? முடியாது'' என கூறி அங்கிருந்து தப்பிச்ச செல்ல முயன்ற போது இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு விட்டு அந்த நபர் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இது தொடர்பாக போலீசார் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது, சென்னை ராயபுரம் பகுதியை கோபால் (41) என தெரிய வந்தது. இதன் பின்னர் இந்த குற்ற சம்பவத்திற்கு பின் வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதை அடுத்து கோபாலின் விவரம் பற்றி லுக் அவுட் நோட்டீஸ் (Lookout Circular) தயார் செய்து, விமான நிலையத்திற்கு அனுப்பி தேடி வந்தனர்.
இந்நிலையில் போலீசார் தேடி வந்த கோபால் கடந்த 21.12.2025 அன்று சீனாவில் இருந்து விமானம் மூலம் மும்பை வந்த போது பிடித்து வைத்து இருப்பதாக விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சாஸ்திரி நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய தனிப்படை போலீசார் உரிய சட்ட நடவடிக்கைகளுடன் மும்பை விமான நிலையம் சென்று ராயபுரத்தைச் சேர்ந்த கோபாலை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர்.
காவல் துறை விசாரணையின் போது, ''நான் தெரியாமல் தவறு செய்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்'' என, கோபால் கூறியுள்ளார் விசாரணைக்குப் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவு அடிப்படையில் சிறையில் அடைத்தனர்.