விஜய் அரசியல் பயணத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு: நடிகர் அருண் விஜய்

விஜய் அரசியல் பயணத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு: நடிகர் அருண் விஜய்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் அரசியல் பயணத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாக நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் பாபி பாலச்சந்திரன் தயாரிப்பில் நடிகர் அருண் விஜயின் இரட்டை வேட நடிப்பில் உருவாகி உள்ள, "ரெட்ட தல" திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனிடையே, தனது புதிய படம் வெற்றி பெற வேண்டி நடிகர் அருண் விஜய் மற்றும் கதாநாயகி ஷிதி இதானி உள்ளிட்டோர் சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தனர்.

அப்போது வெண்ணங்கொடி முனியப்பன் கோயில் நிர்வாகத்தினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்து பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினர். முன்னதாக நடிகர் அருண் விஜய், நடிகை ஷிதி இதானி கோயிலுக்கு வந்ததை அறிந்த ரசிகர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு ஆர்வத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இதைத் தொடர்ந்து அருண் விஜய் செய்தியாளர்களிடம் பேசியதாவது, ''எனது புதிய திரைப்படம் 'ரெட்ட தல' விரைவில் வெளியாக உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமான வெண்ணங்கொடி முனியப்பன் கோயிலில் என்னுடைய திரைப்படம் வெற்றி பெற வேண்டுதல் வைத்துள்ளேன். நிச்சயம் அது நிறைவேறும்.

இதேபோல் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 'ரெட்ட தல' திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சிக்காக செல்ல உள்ளேன். நல்ல திரைப்படங்களை தமிழகத்தில் திரையரங்கிற்கு நேரில் சென்று பார்க்கும் பழக்கம் மக்கள் மத்தியில் இன்னமும் அதிகளவில் உள்ளது.

திரையரங்கிற்கு ரசிகர்களை கொண்டு வருகிற அளவிற்கு நல்ல படம் எடுக்கும் கடமை திரைத்துறையினருக்கு உள்ளது. அதே நேரத்தில் புதிய திரைப்படங்கள் ஓடிடியில் எவ்வளவு நாட்களுக்கு பிறகு வெளியாக வேண்டும் என்ற முடிவை தயாரிப்பாளர்கள் சங்கமும், திரையரங்கு உரிமையாளர்களும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும்.

விஜயின் அரசியல் பயணத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். விஜய் ஒரு முடிவெடுத்து அரசியல் பயணம் மேற்கொண்டுள்ளார். அதை வரவேற்கிறேன். அதேநேரம் அரசியல் மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் புதிதாக வருபவர்களுக்கு அழுத்தம் இருக்கத்தான் செய்கிறது' என்றார்.