மதுரை டூ துபாய் சென்ற விமானத்தில் நடுவானில் கோளாறு - சென்னையில் அவசரமாக தரையிறக்கம்!

மதுரை டூ துபாய் சென்ற விமானத்தில் நடுவானில் கோளாறு - சென்னையில் அவசரமாக தரையிறக்கம்!

மதுரையிலிருந்து துபாய்க்கு 173 பேருடன் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், நடுவானில் பறந்தபோது ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறு காரணமாக சென்னையில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.

மதுரை விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் (Spice Jet Airlines) பயணிகள் விமானம் நேற்று மதியம் வழக்கம் போல் புறப்பட்டது. இதில், 167 பயணிகள் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 173 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்டு நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.

இதனை அறிந்த விமானி, உடனடியாக மதுரை மற்றும் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அந்த சமயத்தில், விமானம் சென்னை வான்வெளியில் பறந்து கொண்டிருந்ததால், சென்னையில் தரையிறங்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதன்படி, அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

பின்னர், விமானம் நடைமேடைக்கு கொண்டு செல்லப்பட்டு, அதில் பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, இயந்திர கோளாறை சரிசெய்யும் பணியில் விமானப் பொறியாளர் குழு ஈடுபட்டது. எனினும், பழுதை சரிசெய்ய நீண்ட நேரமானதால் பயணிகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டது.

இறுதியாக சுமார் 8 மணிநேரத்திற்கு பிறகு, இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்டு 173 பயணிகளுடன் விமானம், இரவு சென்னையில் இருந்து துபாய் புறப்பட்டு சென்றது . நடுவானில் விமானம் பறந்துக்கொண்டிருக்கும் போது கோளாறு ஏற்பட்டதால் பயணிகளிடையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

முன்னதாக, நேற்று முன்தினம் கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்த ஏர் ஏசியா பயணிகள் விமானத்தின் மீது திடீரென பறவை மோதியது. இதில், விமானி சாதுரியமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக சென்னையில் தரையிறக்கியது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி விமானங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது பயணிகள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, வங்கக்கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் அதி தீவிர புயலாக மாறி, ஆந்திராவில் இன்று கரையை கடக்கவுள்ளதால், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் பாதுகாப்பு கருதி, சென்னையிலிருந்து ஆந்திரா, விசாகப்பட்டினத்திற்கும் செல்லும் தினசரி விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.