மதுரை விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம்!

மதுரை விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம்!

 நவீன வசதிகளுடன் மதுரை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ல வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் வரும் ஜனவரி மாதம் செயல்பாட்டுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களுரூ, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்நாட்டு சேவைகளும், துபாய், இலங்கை, அபுதாபி என வெளிநாடுகளுக்கும் விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே சமீபத்தில் பயணிகளின் வருகையை அடிப்படையாக கொண்டு, மதுரை விமான நிலையம் 3-ஆம் தரநிலையில் இருந்து 2-ஆம் தரநிலைக்கு உயர்த்தப்பட்டது.

இதனால், மதுரை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கூடுதல் விமானங்களை இயக்கும் வகையில் மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகளும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதுதவிர விமான ஓடுதள விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்ட மேம்பாட்டுப் பணிகள், மதுரை விமான நிலையத்தில் நடந்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக புதிய வான்வழிக் கட்டுப்பாட்டு கோபுரம் (ATC- Air Traffic Control Tower) அமைக்கும் பணிகள் கடந்த 2021-ல் தொடங்கப்பட்டன. அதிநவீன வசதிகளுடன் அமையும் இந்த வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு, ரூ.88 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது அந்த பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நிறைவு பெற்றுள்ளது.

இதன் மூலம் விமான நிலையத்தில் விமானங்கள் சரியான நேரத்தில் தரையிறங்குவது, புறப்படுவதை எளிதாகவும், துல்லியமாகவும் கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 44.9 மீட்டர் உயரத்தில் கட்டப்படும் இக்கட்டிடம் 7 மாடிகளைக் கொண்டது. இதில் 4 மாடிகள் கட்டடமாகவும், 3 மாடிகள் கோபுரமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போது பெரும்பாலான பணிகள் முடிவுற்றுள்ளன.

இதுகுறித்து மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் கூறுகையில், "புதிதாக கட்டப்பட்டு வரும் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் கட்டிட வேலைகள் 100% முடிவடைந்த நிலையில், தொழில்நுட்ப சோதனை ஓட்டம் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. மேலும், விமான நிலையத்திற்கு வந்து செல்லும், விமானங்களை கையாளும் கட்டுப்பாட்டு மையம் என்பது விமான நிலையம், பாதுகாப்பு, பராமரிப்பு, தகவல் தொடர்பு மற்றும் பிற விமான நிலைய செயல்பாடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு பணிகளோடு தொடர்புடையதாகும்.

மேலும் தற்போது இது குறித்த பாதுகாப்பு ஆய்விற்காக விமான போக்குவரத்து அமைச்சரகத்தில் இருந்து அனுமதி வந்தவுடன் அதிகாரப்பூர்வமாக செயல்பட தொடங்கும். இதன் மூலம் முன்பைவிட விமானங்கள் வருகை, புறப்பாடுகளை துல்லியமாக கையாள முடியும். விமானங்களின் இயக்கத்தை 3 திசைகளிலும் (3 Dimensional View) நன்றாக கண்காணிக்கலாம். இதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படும். அதிக விமானங்களை விரைவாக கையாளுவதிலும் சிரமம் இருக்காது. வரும் ஜனவரி இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மதுரை விமான நிலையம் தற்போது 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் விமானங்கள் மற்றும் பயணிகள் வருவதில்லையே தவிர வான் கட்டுப்பாட்டு அறை மற்றும் விமான நிலையத்திற்குள் நடைபெறும் அனைத்து வேலைகளும் 24 மணி நேரமும் தற்போது நடைபெற்று வருகின்றன" என்றார்.