பெண்ணை கொலை செய்து காரில் வைத்து பூட்டிய ஓட்டுநர்: காரைக்குடி அருகே அதிர்ச்சி சம்பவம்!
காரைக்குடி அருகே பெண் ஒருவர் ஓட்டுநரால் கொலை செய்யப்பட்டு காருக்குள் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி மருது பாண்டியர் நகரைச் சேர்ந்தவர் பாண்டி குமார். இவர் வெளிநாட்டில் உள்ளார். இவரது மனைவி மகேஸ்வரி. இவர் காரைக்குடியில் உள்ளார். இந்நிலையில் இடம் வாங்கும் திட்டத்தில் அதனை பார்ப்பதற்காக காரில் ஓட்டுநர் சசிகுமார் என்பவருடன் ஆவுடபொய்கை சாய்பாபா தெரு பகுதிக்கு மகேஸ்வரி சென்றுள்ளார்.
செல்லும் வழியில் சசிகுமார் மற்றும் மகேஸ்வரிக்கு இடையே வாக்குவாதம் எழுந்ததாகவும் இதில் ஆத்திரமடைந்த சசிகுமார் மகேஸ்வரியை தாக்கி விட்டு அவரை காருக்குள் வைத்துப் பூட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் மர்மமான முறையில் பெண் ஒருவர் காருக்குள் நீண்ட நேரமாக படுத்திருப்பதைக் கண்டு உடனடியாக குன்றக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் பூட்டப்பட்டிருந்த கார் கதவின் கண்ணாடியை உடைத்து பார்த்த போது மகேஸ்வரி கழுத்தில் படுகாயங்களுடன் இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடலை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தேவகோட்டை டிஎஸ்பி கௌதம் உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், மோப்ப நாய் முரளியும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் ஓடி தடயங்களை தேடியும் எதுவும் கண்டறியப்படவில்லை.
அங்கிருந்த சிசிடிவி கேமிரா பதிவுகள், மகேஸ்வரியின் அலைபேசி ஆகியவற்றை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். இதற்கிடையே மகேஸ்வரியின் உறவினர்கள் கொலை செய்தவரை உடனடியாக கைது செய்யும்படி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு எழுந்தது.