திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசிப்பது சட்டவிரோதமாகாது.. அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசிப்பது சட்டவிரோதமாகாது.. அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் லிவ் -இன் முறையில் வசிப்பது சட்டவிரோதமாகாது என அலாகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

லிவ் இன் முறையில் வாழும் 12 பெண்கள் தங்களுக்கு தொடர்ந்து பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் அச்சுறுத்தல் வருவதாகவும், ஆதலால் போலீசாரின் பாதுகாப்பு தேவைப்படுவதால் அதற்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை முடிந்து, அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது உயர்நீதிமன்றம் கூறியதாவது:

லிவ் இன் முறையில் ஒரே வீட்டில் வசிப்பது சட்டவிரோதம் ஆகாது. இதற்காக அவர்களுக்கு பாதுகாப்பு கிடையாது எனக் கூற முடியாது. 

அரசியலமைப்பு சட்டத்தின்படி அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை. ஆதலால் 12 பெண்களுக்கும் போலீஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

அதற்கு முன்பு, அவர்கள் மேஜர்தானா என்பதையும், சுய விருப்பத்தின் அடிப்படையில்தான் ஒன்றாக வாழ்கின்றனரா என்பதையும் காவல்துறை உறுதி செய்ய வேண்டும். மேஜர் என்பதை ஊர்ஜிதம் செய்ய பிறப்பு சான்றிதழ் போன்ற ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். ஆவணம் இல்லையெனில் சட்டரீதியிலான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு, மேஜர் என்பதை உறுதி செய்தல் வேண்டும்.

இவ்வாறு அலாகாபாத் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.