வக்பு சொத்துக்களை பதிவு செய்வதற்கான காலக்கெடு நிறைவு - மத்திய அரசு

வக்பு சொத்துக்களை பதிவு செய்வதற்கான காலக்கெடு நிறைவு - மத்திய அரசு

 வக்பு சொத்து விவரங்களை உமீத் தளத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் (டிச. 6) நிறைவடைந்து விட்டதாக மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிறுபான்மையினர் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் வக்பு சொத்து விவரங்களைப் பதிவு செய்து நிர்வகிப்பதற்காக உமீத் என்ற தளம் 2025 ஜூன் 6 அன்று தொடங்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தெளிவான வழிகாட்டுதல்களின்படி 6 மாத கால அவகாசம் நிறைவடைந்துள்ளது. நேற்றுடன் (டிசம்பர் 6, 2025) பதிவு செய்வதற்கான கெடு நிறைவடைந்தது.

காலக்கெடு நிறைவடையும் இறுதி நாட்களில் பதிவுகள் கணிசமாக அதிகரித்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட மறுஆய்வுக் கூட்டங்கள், பயிற்சிப் பட்டறைகள், உயர் மட்ட தலையீடுகள் காரணமாக இதன் செயல்பாடு புதிய வேகத்துடன் இருந்தது. இதனால் கடைசி மணி நேரங்களில் பதிவேற்றம் அதிகரித்தது.

இந்த தளத்தில் 5,17,040 வக்ஃப் சொத்துக்கள் பதிவேற்றப்பட்டன. 2,16,905 சொத்துக்கள், அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டன. 2,13,941 சொத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. சரிபார்ப்பின் போது 10,869 சொத்துக்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்த மிகப்பெரிய தேசிய அளவிலான முயற்சிக்காக, சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் மாநில மற்றும் யூனியன் பிரதேச வக்பு வாரியங்களுடனும் சிறுபான்மையினர் நலத் துறைகளுடனும் தொடர்ச்சியான பயிலரங்குகளையும் பயிற்சி அமர்வுகளையும் நடத்தியது. நாடு தழுவிய அளவில் 7 மண்டலக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பதிவேற்றங்களின் போது எழும் சிக்கல்களைத் தொழில்நுட்ப ரீதியாக விரைவாகத் தீர்க்க, அமைச்சக அலுவலகத்தில் ஒரு பிரத்யேக உதவி மையம் அமைக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.