டித்வா புயலால் கனமழை: 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

டித்வா புயலால் கனமழை: 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

டித்வா புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், 6 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘டித்வா’ புயல் காரணமக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. புயலானது சென்னை, புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், நாளை (நவ.30) கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

கனமழையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்தின்கீழ் செயல்படுகிற அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (நவ.29) விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை நேற்றே அறிவித்தது. மேலும் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக இன்று கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, நாகை, திருவாரூர், பெரம்பலூர் ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோக, அரியலூர், விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ராமநாதபுரத்தில் ராமேஸ்வரம், ராமநாதபுரம், ஆர்.எஸ். மங்கலம், திருவாடானை ஆகிய 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் சிதம்பரத்தில் நடைபெறவிருந்த பல்கலைக்கழக பருவத் தேர்வுகளும் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.