தமிழகத்தில் திமுக, தவெக இடையே தான் போட்டியா? அமைச்சர் கே.என்.நேரு பதில்

தமிழகத்தில் திமுக, தவெக இடையே தான் போட்டியா? அமைச்சர் கே.என்.நேரு பதில்

தமிழகத்தில் திமுக, தவெக இடையே தான் போட்டி என திமுகவினர் ஒருபோதும் கூறவில்லை என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில் செம்மொழிப் பூங்கா கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. செம்மொழி பூங்கா பணிகளை நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

ஆய்விற்கு பின்னர் நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, "செம்மொழி பூங்காவை திறக்க இந்த மாத இறுதியில் முதல்வர் வர இருக்கிறார். செம்மொழி பூங்கா பணியை நேரில் பார்வையிட்டு பணிகளை விரைவாக முடிக்க சொல்லி இருக்கிறோம். ஒரு வார காலத்திற்கு பணிகள் முடியும். இன்னும் இரண்டு முதல், மூன்று வேலைகள் மட்டுமே பாக்கி இருக்கிறது. மற்ற வேலைகள் அனைத்தும் முடிந்து இந்த மாத இறுதிக்குள் பூங்கா பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

செம்மொழி பூங்காவில் மரங்கள் வைக்கவில்லை என்று சொல்கிறீர்கள். பூங்காவில் அரிதான மரங்கள் நடப்பட்டுள்ளது. ரோஜாக்கள் மட்டுமே ஆயிரம் வகை ரோஜாக்கள் நடப்பட்டுள்ளது. உலகில் எங்கெங்கெல்லாம் இல்லாத பூக்கள், செடிகள் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மரம் நடப்பட்டுக் கொண்டிருக்கிறது. விரைவில் வளர்ந்து விடும்" என்றார்.

மேலும் பேசிய அவர், "தமிழகத்தில் யாரும் ஓட்டு போட முடியாத நிலை வரும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்ததாக கூறுகிறீர்கள். இவ்வளவு பெரிய அரசாங்கம் இருக்கின்றது. ஒவ்வொரு பூத்துக்கும் பிஎல்ஓ போடப்பட்டு 68,000 பேர் பணியாற்றுகின்றனர். Bl2 தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பூத் ஏஜெண்டுகள் போடப்பட்டு இருக்கிறது.

எல்லா இடத்திலும் நேரடியாக விண்ணப்பம் கொடுத்து 90% கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 17, 18 நாட்கள் இருக்கிறது. முதல்வர் நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து பேசி வருகிறார். பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

வாக்காளர் பட்டியலில் குளறுபடி இல்லை. கடந்த 2002 இல் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் அந்த குடும்ப தலைவரின் பெயர் அடிப்படையில் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரையும் சேர்ந்து கொள்ளலாம். தவறு இல்லாமல் பூர்த்தி செய்து கொடுக்க சொல்லப்பட்டுள்ளது.

புதிதாக சேர்ப்பவர்களுக்கு பார்ம் 6 கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த முப்பது நாள் வேலை முடிந்தவுடன் அடுத்த முப்பது நாள் சரிபார்க்கும் பணிகள் தான் இருக்கும். அதனால் ஓட்டு சேர்ப்பதற்கான எல்லா முயற்சியும் அரசு எடுத்துக் கொண்டு இருக்கிறது" என்றார்.

தமிழகத்தில் திமுக, தவெக இடையே தான் போட்டி என்பதை திமுக மேடைகளிலேயே உறுதிப்படுத்துவதாக தவெக தலைவர் விஜய் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "எந்த திமுக மேடையில் உறுதிப்படுத்தி பேசி இருக்கிறோம்? எந்த மேடையில் உறுதிப்படுத்தினோம்? என்பதை அவரிடமே கேளுங்கள். எங்களிடம் ஏன் கேட்கிறீர்கள்? என்றார்.