“சட்டப்படி எதிர்கொள்வேன்!” - ஊழல் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்
“எனது துறையின் சாதனைகளை மறைத்து, அமலாக்கத் துறையை ஏவி விட்டு அதிமுக - பாஜக கூட்டணி நடத்தும் நாளொரு புகார், பொழுதொரு அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
‘கட்சி நிதி’ என்ற பெயரில், நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1,020 கோடி லஞ்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் குற்றச்சாட்டுடன் டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியுள்ளது.
இதை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், அமைச்சர் கே.என்.நேரு இன்று வெளியிட்ட அறிக்கையில், “ஒவ்வொரு துறையிலும் திராவிட மாடல் அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சி வரிசையில் அமலாக்கத் துறையையும் சேர்ந்துகொண்டு அதை மத்திய பாஜக அரசின் ஏவல் துறையாக்கி, நாளொரு புகாரும், பொழுதொரு பிரச்சாரமுமாக என்னைக் குறிவைத்து தொடர்ந்து அவதூறில் ஈடுபட்டு வருவது மிகுந்த கண்டனத்துக்குரியது.
கடந்த ஐந்து வருடங்களில் எனது துறையின் கீழ் 24,752 கி.மீ. சாலைகள் போடப்பட்டுள்ளன. கிராமப்புற மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 1 கோடியே 22 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் 77 லட்சத்து 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு பாதுகாப்புத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் என இதுவரை 1762 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த கோவை செம்மொழிப் பூங்கா.
சென்னை என்றால் தொல்காப்பிய பூங்கா, கோவை என்றால் செம்மொழிப் பூங்கா என்பதோடு மக்கள் கண்டுகளிக்க, அவர்களது பொழுது போக்கிற்கு ஏற்ற பூங்காக்களை திராவிட மாடல் அரசு போல் தமிழ்நாட்டில் அதிமுக அரசும் செய்யவில்லை. மற்ற மாநிலங்களில் உள்ள பாஜக ஆளும் அரசுகளும் செய்யவில்லை. அதனால்தான் எனது துறையின் திராவிட மாடல் வளர்ச்சி எதிர்க்கட்சிகளின் கண்ணை உறுத்துவதை விட அமலாக்கத் துறையின் கண்களையும் உறுத்துகிறது.
சென்னையில் அதிமுக ஆட்சியில் சாலைகளும், சுரங்க பாதைகளும் ஒரு மழைக்கே வெள்ளக்காடாக காட்சியளித்ததை அனைவரும் அறிவர். ஆனால் இன்று சென்னையில் உள்ள சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்காத நிலையை உருவாக்கியிருக்கிறோம்.
செம்பரம்பாக்கம் என்றாலே அதிமுக ஆட்சிதான் நினைவுக்கு வரும். அந்த நிலையை மாற்றி எத்தகைய மழை வெள்ளத்திலும், எத்தனை முறை செம்பரம்பாக்கத்தில் தண்ணீர் திறந்தாலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, இன்னலின்றி மழை வெள்ளத் துயரங்களில் இருந்து சென்னை மக்களை காப்பாற்றியிருக்கிறோம்.
குறிப்பாக பாஜக-வினரை இந்த சாதனைகள் ரொம்பவே மிரட்டுகிறது. நிதியை முடக்குகிறோம். ஆளுநரை வைத்து முட்டுக்கட்டை போடுகிறோம். ஏஜென்ஸிகளை விட்டு பிரச்சாரம் செய்கிறோம். ஆனாலும் சாதனைகள் செய்கிறார்களே என்ற எரிச்சல்.
எனவே ‘எதை தின்றால் பித்தம் தெளியும்’ என திண்டாடுகிறார்கள். ஆகவே அமலாக்கத் துறை போன்ற ஏஜென்ஸிகளை ஏவி விடுகிறார்கள். மத்திய பாஜக அரசு செய்ய வேண்டிய அரசியல் பிரச்சாரத்தை அமலாக்கத் துறையை வைத்து செய்கிறார்கள். தன்னாட்சி மிக்க அமைப்பு என உருவாக்கப்பட்ட அமலாக்கத் துறை இன்று பாஜக-வின் துணை அமைப்பாக்கப்பட்டு இருக்கிறது.
என் சகோதரர் மீது 2013-ல் வாங்கிய கடனை வைத்து போடப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் “எந்த குற்றமும் நடக்கவில்லை” என ரத்து செய்து விட்டது. அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சும் ரத்து செய்துவிட்டது. ஆனாலும் அமலாக்கத் துறையை மீண்டும் மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபடச் சொல்லி மத்திய பாஜக அரசு நிர்பந்திக்கிறது என்றால் அவர்களுக்குப் பயம் நானல்ல. இந்த துறை செய்துள்ள சாதனைகள்.
ஆனால், ஒன்று மட்டும் நான் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். எனது நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்குதல் நிர்வாகத் துறையைப் பொறுத்தமட்டில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு வழங்குதல், மழை நீர் வடிகால் பணிகளை நிறைவேற்றுதல், தலை சிறந்த பூங்காக்களை அமைத்தல் ஆகியவையே முதன்மையான பணிகள். முழுமையான சாதனைகள். மற்றபடி என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் பணியாற்ற வந்துள்ள நாங்கள் மத்திய பாஜக அரசின் தூண்டுதலில் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடும் அமலாக்கத் துறைக்கோ அல்லது அதிமுக - பாஜக கூட்டணியினர் பொய்யையும், புரட்டையும் மட்டுமே மூலதனமாக வைத்து ஈடுபடும் அவதூறுப் பிரச்சாரத்திற்கோ அஞ்சமாட்டோம்” என்று கே.என்.நேரு கூறியுள்ளார்.