'ஆயுதப்படை பிரிவு காவலர்களின் பணி சவால் நிறைந்தது' - பொங்கல் விழாவில் காவல் ஆணையர் அருண் பேச்சு
ஆயுதப்படை பிரிவை சார்ந்த காவலர்களின் பணி மிகவும் சவாலானது என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.
சென்னை பரங்கிமலை ஆயுதப்படை காவலர் மைதானத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஆயுதப்படை பிரிவு, மத்திய குற்ற பிரிவு மற்றும் நுண்ணறிவு பிரிவுகள் சேர்ந்து பொங்கல் விழாவை கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் கலந்து கொண்டார்.
பின்னர் மேடையில் பேசிய காவல் ஆணையர் அருண், ''சென்னை புறநகர் காவல் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். காவல்துறையில் நிறைய பிரிவுகள் உள்ளன. சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, ஆயுதப்படை, மத்திய குற்றப்பிரிவு, புலனாய்வு பிரிவு என நிறைய பிரிவுகள் உள்ளன.

இவற்றில் ஆயுதப்படை, மத்திய குற்ற பிரிவு மற்றும் நுண்ணறிவு பிரிவுகள் சேர்ந்து இன்று பொங்கல் விழாவை கொண்டாடிக் கொண்டு இருக்கிறீர்கள். அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகள். காவல் பணி சிறிது கடினமான பணி என்பது அனைவருக்கும் தெரியும். மற்ற பணியாளர்கள் போல விடுமுறை காலங்களில் ஓய்வு எடுக்க முடியாத ஒரு பணி இது.
சென்னையில் கடந்த சில வாரங்களாக எத்தனையோ ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடந்துள்ளது. பல்வேறு சங்கங்கள், கூட்டமைப்புகள், அரசியல் கட்சிகள் என ஏதாவது ஒரு ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டம் செய்து கொண்டிருப்பார்கள். அவர்களுடைய கோரிக்கையும் நியாயமாக தான் இருக்கும். இருந்தாலும் அந்த போராட்டங்களை கையாள்வது என்பது காவல்துறையின் வேலை.
குறிப்பாக இந்த ஆயுதப்படை பிரிவை சார்ந்த பெண் காவலராக இருந்தாலும் சரி, ஆண் காவலராக இருந்தாலும் சரி அவர்களுடைய பணி மிகவும் சவாலானது. பொதுமக்களை நாம் மிகவும் கவனமாக கையாள வேண்டும். ஆயுதப்படை காவலர்கள் குறிப்பாக பெண் காவலர்கள் இந்த பணியை மிகவும் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
இது ஒரு சாதாரண பணி அல்ல, ஒவ்வொருவரும் அவர்களுடைய உரிமைகளைக் கேட்டு வரும் பொழுது அவர்கள் 'எமோஷன்' ஆக இருப்பார்கள். அவர்களை கையாள்வது சாதாரண விஷயம் இல்லை. ஒவ்வொருத்தரும் பொது மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும், அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்க்க வேண்டும், ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என நிறைய விஷயங்களை செய்கிறார்கள். அப்படி செய்யும் பொழுது காவல்துறையினர் தங்களுடைய சம நிலையை இழந்து விடாமல், கோபப்படாமல் அவர்களை மிகச் சிறப்பாக கையாளுகிறார்கள்'' என்றார்.