விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன நீதிபதி! குறுக்கே வந்த சென்சார் போர்டு! ஜனநாயகன் ரிலீஸ் எப்போ ?
ஜனநாயகன் திரைப்படத்திற்கான தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில் இன்றைய தினம் உயர்நீதிமன்றம், படக்குழுவுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கிய நிலையில் அதை எதிர்த்து தணிக்கைக் குழு மேல்முறையீடு செய்யவுள்ளதால் படம் ரிலீஸாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
நடிகர் விஜய்யின் 69-வது மற்றும் அவரது திரைப்பயணத்தின் கடைசிப் படமாக 'ஜனநாயகன்' திரைப்படம் பிரம்மாண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ளது. எச். வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
படம் இன்று (ஜனவரி 9) வெளியாகவிருந்த நிலையில், தணிக்கைச் சான்றிதழ் தாமதமானதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 'ஜனநாயகன்' படத்திற்கு 'யூ/ஏ' சான்றிதழ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தணிக்கை வாரியத்தில் குறிப்பிட்ட சில காட்சிகள் தொடர்பாக ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதன் காரணமாகவே சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் நீடித்து வந்தது. படத்தயாரிப்பு நிறுவனம் தொடுத்த வழக்கில், இன்று காலை 10:30 மணியளவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி. ஆஷா தீர்ப்பு வழங்கவுள்ளார்.
இன்று படம் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த சூழலில், உயர்நீதிமன்ற தீர்ப்பும் அதே நாளில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், 'ஜனநாயகன்' படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக இரவு படக்குழு அறிவித்தது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் திட்டமிடப்பட்டிருந்த காட்சிகள் ரத்து செய்யப்பட்டு, முன்பதிவு செய்தவர்களுக்குப் பணத்தைத் திரும்ப அனுப்பும் பணிகளும் தொடங்கின.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் படமென்பதால், 'ஜனநாயகன்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பு நிலவியது. வெளியீட்டுக்கான அனைத்துப் பணிகளும் ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில், கடைசி நேர சிக்கலால் அவை அனைத்தும் முடக்கப்பட்டன. தணிக்கைப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வராததால், படம் எப்போது வெளியாகும் என்ற புதிய குழப்பம் ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. 'ஜனநாயகன்' படத்திற்குத் தடங்கல்கள் ஏற்படுத்தும் விதமாக தணிக்கை வாரியம் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததும், நடிகர் விஜய்க்கு ஆதரவாகப் பலரும் குரல் கொடுக்கத் தொடங்கினர்.
திரைப்பிரபலங்களைத் தாண்டி, அரசியல் கட்சி நிர்வாகிகளும் இப்படத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிரிஷ் சோடங்கர், எம்.பி. மாணிக்கம் தாகூர், எம்.பி. ஜோதிமணி, விஜய் வசந்த், பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் இந்த விவகாரத்தில் பாஜக அரசை விமர்சித்திருந்தனர். அதே சமயம், இந்தப் பிரச்சனையை அரசியலாக்கக் கூடாது என்ற கருத்தும் மேலோங்கியது.
'இந்தப் பிரச்சனைக்கு, நடிகர் விஜய் அல்ல, அரசியல்வாதி விஜய் தகுந்த பாடம் புகட்டுவார்' என ஒரு குரல் ஓங்கி ஒலித்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆஷா தீர்ப்பளித்தார். அதில் ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக U/A சான்று வழங்க உத்தரவிட்டார். மேலும் மறுதணிக்கைக்கான உத்தரவையும் அவர் ரத்து செய்தார். இந்த நிலையில் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்க உத்தரவிட்ட தனிநீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தணிக்கை குழு மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கை திங்கள்கிழமை அன்று விசாரிக்குமாறு கேட்டதற்கு, முதலில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யுங்கள் பிறகு எப்போது விசாரமை என்பதை நாங்கள் சொல்கிறோம் என நீதிபதி தெரிவித்துவிட்டார். முதலில் யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டதை அடுத்து இந்த படத்தை வரும் 11 அல்லது 12 ஆகிய தேதிகளிலோ அல்லது 14 ஆம் தேதியோ வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தணிக்கை குழு மேல்முறையீட்டால் தற்போது படம் ரிலீஸ் தள்ளி போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.