முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு விழா - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு விழா - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்ததற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த ஜாக்டோ - ஜியோ அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தன. இந்த சூழலில், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் தற்போது திமுக ஆட்சி முடிவுக்கு வரவுள்ள நிலையிலும், அந்த தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படாததை கண்டித்து, தொடர் போராட்டங்களை ஜாக்டோ ஜியோ நடத்தி வந்தது.

இந்நிலையில், அரசு ஓஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த 3ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். ஜனவரி 10ஆம் தேதி இதுதொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது.

அதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கிடைத்து வந்த ஓய்வூதியம் மற்றும் பல்வேறு பலன்களை தொடர்ந்து அளிக்கக் கூடிய ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (Tamil Nadu Assured Pension Scheme) என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் வெ.சோமசுந்தரம், இரா.தாஸ், “அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பல்வேறு துறை வாரியான கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. இருப்பினும், ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு விழா மற்றும் உரிமை மீட்பு மாநாட்டை நடத்த உள்ளோம்.

முதலமைச்சருக்கு பாராட்டு விழா குறித்து ஜாக்டோ - ஜியோ அறிக்கை 

பிப்ரவரி 8 தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் இந்த பாராட்டு விழா நடத்தப்படும். அத்துடன், ஓய்வூதிய திட்டத்தில் 10 சதவீதம் ஊழியர் பங்களிப்பு என்பதை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையையும் வைக்கவுள்ளோம். இந்த மாநாட்டில் சுமார் 2 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஓய்வூதியத் திட்டத்தின் மூலமாக ஏற்கனவே ஓய்வுபெற்றவர்களுக்கும், பணியில் உள்ளவர்களுக்கும் பல்வேறு பலன்கள் கிடைக்கும். எங்களது நீண்ட கால கோரிக்கையை அவர் நிறைவேற்றியுள்ளார். இன்னும் நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பையும் முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது" என அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய அவர்கள், "ஓய்வூதியத்தை பறித்தவர்கள், ஓய்வூதியம் கோரி ஜாக்டோ - ஜியோ போராட்டம் நடத்திய போது வேடிக்கை பார்த்தவர்கள், இந்த போராட்டத்திற்கு தொடர்பே இல்லாதவர்கள், தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டத்தை விமர்சிக்கின்றனர் என்று வருத்தம் தெரிவித்தனர்.