கராபோ கோப்பை 2025 - லிவர்பூல் எஃப்சிக்கு அதிர்ச்சி கொடுத்த கிரிஸ்டல் பேலஸ்!

கராபோ கோப்பை 2025 - லிவர்பூல் எஃப்சிக்கு அதிர்ச்சி கொடுத்த கிரிஸ்டல் பேலஸ்!

லிவர்பூல் அணிக்கு எதிரான கராபோ கோப்பை கால்பந்து லீக் போட்டியில் கிரிஸ்டல் பேலஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கராபோ கோப்பை கால்பந்து தொடரின் நடப்பு சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லிவர்பூல் எஃப்சி அணியை எதிர்த்து கிரிஸ்டல் பேலஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கிரிஸ்டல் பேலஸ் அணி, எதிரணி மீது அழுத்தம் கொடுத்தது.

லிவர்பூல் அதிர்ச்சி தோல்வி

இதன் காரணமாக ஆட்டத்தின் 41ஆவது நிமிடத்தில் கிரிஸ்டன் பேலஸ் அணியின் நட்சத்திர வீரர் இஸ்மைலா சார் முதல் கோலை அடித்து அணியை முன்னிலைப் படுத்தினார். அதனைத் தொடர்ந்தும் சிறப்பாக செயல்பட்ட இஸ்மைலா சார் ஆட்டத்தின் 45ஆவது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலைப் பதிவுசெய்து மிரட்டினார். மறுபக்கம் முதல் பாதியில் இறுதிவரை போராடிய லிவர்பூர்ல் அணியால் ஒரு கோல் கூட பதிவு செய்ய முடியாமல் தடுமாறியது.

இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் கிரிஸ்டல் பேலஸ் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலைப் பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் கிரிஸ்டல் பேலஸ் அணி தங்களுடைய டிஃபென்ஸை வலிமைப்படுத்தி, எதிரணியின் கோலடிக்கும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தியது. அதேசமயம் அந்த அணியின் யெரெமி பினோ ஆட்டத்தின் 88ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதன் மூலம் ஆட்டநேர முடிவில் கிரிஸ்டல் பேலஸ் அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் லிவர்ஃபூல் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியதுடன் இத்தொடரின் காலிறுதி சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் லிவர்பூல் அணியானது தொடர் தோல்விகள் காரணமாக கராபோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

காலிறுதியில் மான்செஸ்டர் சிட்டி

இன்று நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி மற்றும் ஸ்வான்சீ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்து கோல்களை அடித்தனர். அதன்படி, ஆட்டத்தின் 12ஆவது நிமிடத்தில் ஸ்வான்சீ அணிக்காக ஃபிரான்கோ கோலடிக்க, ஆட்டத்தின் 39ஆவது நிமிடத்தில் மான்செஸ்டர் அணிக்காக ஜெர்மி டோக்கு கோலடித்தார்.

இதன் காரணமாக முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் செய்தன. பின்னர் நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட மான்செஸ்டர் அணிக்கு ஆட்டத்தின் 77ஆவது நிமிடத்தில் ஒமர் மார்மௌஷும், ஆட்டத்தின் கூடுதல் நேரமான 90+4ஆவது நிமிடத்தில் ராயன் செர்கியும் கோலடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். மறுபக்கம் ஸ்வான்சீ அணியால் மேற்கொண்டு எந்த கோலையும் பதிவு செய்ய முடியவில்லை.