நாடு முழுவதும் 11 கோடிக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட சுகாதார திட்டம் - 3 கின்னஸ் உலக சாதனைகள் படைத்த இந்தியா
தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட சுகாதார திட்டங்களின் மூலம் இந்தியா 3 கின்னஸ் உலக சாதனைகளை படைத்திருக்கிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய சுகாதார அமைச்சகமானது செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை ‘ஸ்வஸ்த் நாரி, சஷக்த் பரிவார் அபியான்’ என்ற இயக்கத்தை முன்னெடுத்தது. ‘போஷன் மாஹ்’ என்று சொல்லக்கூடிய ஊட்டச்சத்து மாதத்தில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு திட்டங்களில் இந்த திட்டமும் ஒன்றாகும். இந்த இயக்கத்திற்கான நாடு தழுவிய பிரச்சாரத்தை பிரதமர் மோடியும் மேற்கொண்டார்.
அப்போது, “தாய்மார்கள், சகோதரிகள் போன்ற பெண் சக்திகள்தான் நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக உள்ளனர். ஒரு தாய் ஆரோக்கியமாக இருந்தால் முழு குடும்பமும் ஆரோக்கியமாக இருக்கும்” என்று எடுத்துரைத்தார்.
இத்திட்டத்தின்கீழ் சுகாதாரத் தளத்தில் பல்வேறு உடல்நல பரிசோதனைகளுக்காக லட்சக்கணக்கானோர் பதிவு செய்தனர். ஒரே மாதத்தில் மத்திய சுகாதார தளத்தில் அதிகபட்சமாக 3.21 கோடி பேர் பதிவு செய்தனர். ஒரே வாரத்தில் மார்பக புற்றுநோய் பரிசோதனைக்காக 9.94 லட்சம் பெண்களும், மற்ற பரிசோதனைகளுக்காக 1.25 லட்சம் நபர்களும் பதிவு செய்துள்ளனர். இதற்காக 3 மூன்று பிரிவுகளின்கீழ் இந்தியா கின்னஸ் சாதனையில் இடம் பெற்றிருக்கிறது.
நாடு முழுவதும் உள்ள பெண்கள், இளம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதில் ‘ஸ்வஸ்த் நாரி, சஷக்த் பரிவார் அபியான்’ திட்டம் மூலம் தனி கவனம் செலுத்தப்பட்டது. சுகாதார மேம்பாட்டிற்கான இந்த மாபெரும் முயற்சியானது நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்தையும் சென்றடைந்தது. இந்த இயக்கத்தின்கீழ் நடத்தப்பட்ட முகாம்களில் 19.7 லட்சம் பேரும், சுகாதார நிலையங்களில் 11 கோடிக்கும் அதிகமானோரும் கலந்துகொண்டனர்.
மத்திய அரசு நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டன. 20க்கும் மேற்பட்ட அமைச்சங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அமைச்சகங்களை சேர்ந்த அதிகாரிகளும் இந்த முன்னெடுப்பில் தங்களை ஈடுபடுத்தி கொண்டனர்.
குறிப்பாக, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்து ராஜ் பிரதிநிதிகள், 1.14 கோடிக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், 94 லட்சம் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பிற சமூக தள உறுப்பினர்கள் என 5 லட்சம் பேர் இதில் ஈடுபட்டனர்.
இதன் பலனாக, 1.78 கோடிக்கும் மேலான பிபி பரிசோதனைகள், 1.73 கோடி டயாபெட்டிக் பரிசோதனைகள், 69.6 லட்சம் வாய்வழி புற்றுநோய் பரிசோதனைகள், 1.43 கோடி தடுப்பூசிகள் மற்றும் 1.51 கோடி ரத்த சோகை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் 85.9 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் காச நோய்க்கும், 10.2 லட்சத்திற்கும் அதிகமானோர் அரிவாள் செல் சோகைக்கும் (SCD) பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக, 2.14 கோடி பேர் கவுன்சலிங் மற்றும் நல்வாழ்வு ஆலோசனைகளில் பங்கேற்றனர்.