ஐசிசி மாதாந்திர விருதுகள்: டிசம்பர் மாதத்திற்கான விருதை வென்ற மிட்செல் ஸ்டார்க், லாரா வோல்வார்ட்

ஐசிசி மாதாந்திர விருதுகள்: டிசம்பர் மாதத்திற்கான விருதை வென்ற மிட்செல் ஸ்டார்க், லாரா வோல்வார்ட்

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்த மிட்செல் ஸ்டார், டிசம்பர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு மாதமும் கிரிக்கெட்டில் சிறந்த விளங்கும் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மாதாந்திர விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் ஜஸ்டின் க்ரீவ்ஸ், நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி மற்றும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

இதில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், டிசம்பர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றுவதில் மிட்செல் ஸ்டார்க் முக்கிய பங்கு வகித்தார். ஏனெனில் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் போன்றோர் காயம் காரணமாக இந்த தொடரில் விளையாடவில்லை.

அப்படி இருந்த நிலையிலும், அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான மிட்செல் ஸ்டார்க் தனி ஒருவனாக அணியின் வேகப்பந்து வீச்சு துறையை வழிநடத்தி, அதில் வெற்றியையும் பதிவு செய்திருந்தார். அதிலும் குறிப்பாக மூன்று டெஸ்ட் போட்டிகளில் அவர் மொத்தமாக 16 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதுடன், பேட்டிங்கில் இரண்டு அரைசதங்களையும் விளாசி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

இதன் காரணமாக தற்சமயம் டிசம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதை மிட்செல் ஸ்டார்க் வென்றுள்ளார். இதன் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக முதல் முறையாக ஐசிசியின் மாதாந்திர வீரர் விருதை வென்றுள்ளார்.

அதேசமயம் டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் ஷஃபாலி வர்மா, தென்னாப்பிரிக்காவின் கேப்டன் லாரா வோல்வார்ட் மற்றும் சக வீராங்கனை சுனே லூஸ் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். இதில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட், டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை வென்றுள்ளார்.

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் அவர் சிறப்பாக விளையாடியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அதன்படி அத்தொடரில் மூன்று சதங்கள் உள்பட 392 ரன்களை லாரா வோல்வார்ட் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.