எஸ்ஏ20 லீக் 2026: சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் அணிகள் அசத்தல் வெற்றி
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தென்னாப்பிரிக்காவின் ஃபிரான்சைஸ் டி20 லீக் தொடரான எஸ்.ஏ.20 லீக்கின் நான்காவது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கேப்டவுனில் நேற்று செஞ்சூரியனில் நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கேப்பிட்டல்ஸ் அணி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் அணியில் மேத்யூ டி வில்லியர்ஸ் 13 ரன்னிலும், கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 2 ரன்னிலும் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த ரைலீ ரூஸோவ் - வியான் முல்டர் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
பின்னர் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரைலீ ருஸோவ் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 48 ரன்களிலும், வியான் முல்டர் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 43 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களில் அகீல் ஹொசைன் 22 ரன்களைச் சேர்க்க, ஜேஎஸ்கே அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்களைச் சேர்த்தது. கேப்பிட்டல்ஸ் தரப்பில் மில்ஸ், யூசுஃப், பார்சன்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அசத்தல்
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய கேப்பிட்டல்ஸ் அணிக்கு வில் ஸ்மீத் - பிரைஸ் பார்சன்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், வில் ஸ்மீத் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான பார்சன்ஸும் 42 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களால் சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. சூப்பர் கிங்ஸ் தரப்பில் துவான் ஜான்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நேற்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் சன்சரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஜோர்டன் ஹர்மான் 62 ரன்களையும், டி காக் 42 ரன்களையும் சேர்த்தனர். ராயல்ஸ் தரப்பில் பார்ட்மேன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ராயல்ஸ் அணியில் கைல் வெர்ரைன், ஆசா டிரைப் ஆகியோரை தவிர்த்து எந்த வீரரும் இரட்டை இலக்க ரன்களைக் கூட எட்டவில்லை. இதனால் அந்த அணி வெறும் 49 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சன்ரைசர்ஸ் தரப்பில் ஆன்ரிச் நோர்ட்ஜே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது.