வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் உலகக் கோப்பை சாம்பியன் மறைவு - கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரவும், 1975 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்தவருமான பெர்னார்ட் ஜூலியன் காலமானார். அவருக்கு வயது 75.
வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைப் பதிவு செய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 10 ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது.
இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், இப்போட்டிக்கு முன்னதாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் பெர்னார்ட் ஜூலியன் காலமானார். மேலும் அவர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
தனது 18-வது வயதில் டிரினிடாட்&டொபாகோ அணிக்காக முதல் தரப் போட்டிகளில் அறிமுகமான ஜூலியன், கடந்த 1973 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் 2 சதங்கள், 3 அரை சதங்கள் என 30.92 சராசரியில் 866 ரன்களையும், பவுலிங்கில் 2.46 என்ற எகானமியில் 50 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இது தவிர, அவர் 12 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி, பேட்டிங்கில் 14.33 சராசரியில் 86 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் அவர் 18 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் கடந்த 1975ஆம் ஆண்டு ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் பெர்னார்ட் ஜூலியன் அங்கம் வகித்துள்ளார்.
இது தவிர, 195 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 3 சதங்கள், 27 அரைசதங்களுடன் 5,790 ரன்களையும், 483 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும் 115 லிட்ஸ் ஏ போட்டிகளில் விளையாடியுள்ள பெர்னார்ட் அதில் ஒரு சதம், 3 அரைசதங்களுடன் 1,450 ரன்களையும், 153 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இருப்பினும், 1977 கெர்ரி பாக்கர் உலகத் தொடர் போட்டியில் பங்கேற்ற பிறகு, வெஸ்ட் இண்டீஸின் கிரிக்கெட்டின் உச்சத்தில் இருந்த பெர்னார்ட் ஜூலியனின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
அதன் பின், 2005 ஆம் ஆண்டு பெர்னார்ட் ஜூலியனுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். சிகிச்சைக்குப் பிறகு, 90 சதவீதம் குணமடைந்திருந்த ஜூலியன், நேற்று திடீரென காலமான செய்தி, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து பெர்னார்ட் ஜூலியனிற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருவதுடன், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தங்கள் ஆறுதல்களை கூறி வருகின்றனர்.