கள்ளக் காதலை தட்டிக்கேட்ட கணவன் எரித்துக் கொலை... கரூரில் கொடூரம்

கள்ளக் காதலை தட்டிக்கேட்ட கணவன் எரித்துக் கொலை... கரூரில் கொடூரம்

திருமணத்தை மீறிய உறவில் இருந்த மனைவியை தட்டிக் கேட்டதால் கணவன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் மேலப்பாளையம் கிராமத்தில் உள்ள வடக்குப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (47). இவர் கரூரில் உள்ள தனியார் டெக்ஸ் நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி பாண்டீஸ்வரி (49) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

பாண்டீஸ்வரி கரூர் நரிகட்டியூர் ரோடு பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்துள்ளார். இவர் வீட்டின் அருகே நாமக்கல் ஒருவாந்தூரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வரும் இவருக்கும் பாண்டீஸ்வரிக்கும் இடையே கடந்த 8 மாதங்களாக திருமணத்தை மீறிய உறவு இருந்திருக்கிறது இதுகுறித்து பாண்டீஸ்வரியின் கணவர் செந்தில்குமாருக்கு தெரியவரவே, அவர் இருவரையும் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி இரவு சணப்பிரட்டி கிராமம், ஆர்.எஸ்.புதூர் சாலையில் உள்ள அரசு மதுபானக்கடை அருகே உள்ள காட்டுப்பகுதியில், அவர் மது அருந்தி கொண்டிருந்தபோது, பாண்டீஸ்வரிக்கும் செந்தில்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த ராஜமாணிக்கமும், பாண்டீஸ்வரியும் சேர்ந்து பீர் பாட்டிலால் செந்தில்குமாரின் தலையில் அடித்து, அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.

பின்பு அருகிலிருந்த பெட்ரோல் பங்கிலிருந்து டீசல் வாங்கி வந்து, செந்தில்குமார் உடலில் ஊற்றி எரித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். கடந்த 27ஆம் தேதி காலை காட்டுப்பகுதிக்கு சென்ற சிலர், அங்கு கருகிய நிலையில் இருந்த உடலைக் கண்டு, கரூர் பசுபதிபாளையம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அத்தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

கொலை செய்யப்பட்ட செந்தில்குமார் 

இதனைத்தொடர்ந்து செந்தில்குமார் பிரேதத்தை பசுபதிபாளையம் போலீசார் கைப்பற்றி, காந்தி கிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நேற்று (ஜன 28) மாலை அவரது உடல், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்த கொலை குறித்து காவல்துறை விசாரணையில், செந்தில்குமாரின் மனைவி பாண்டீஸ்வரி முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்து வந்த நிலையில், தனது கணவரை திட்டமிட்டு கொலை செய்ததை பின்னர் ஒப்புக்கொண்டார்.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, சமையல் மாஸ்டராக இருந்த ராஜமாணிக்கம் திருமண புரோக்கராக பாண்டீஸ்வரிக்கு பழக்கமாகி இருக்கிறார். அந்த பழக்கம் நாளடைவில் வளர்ந்து தினந்தோறும் செல்போனில் பேசிவந்துள்ளனர். இந்த விஷயம் கணவர் செந்தில்குமாருக்கு தெரிய வர, இருவருக்கும் செந்தில்குமார் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாண்டீஸ்வரி ராஜமாணிக்கத்துடன் சேர்ந்து கணவரை தீர்த்து கட்டியதாக கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து, சமையல் மாஸ்டர் ராஜமாணிக்கம் மற்றும் பாண்டீஸ்வரியை பசுபதிபாளையம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.