'ரூ. 1 கோடியே 14 லட்சம் ஜிஎஸ்டி கட்டணும்...' ஏழை முதியவருக்கு வந்த கடிதத்தால் அதிர்ச்சி!

'ரூ. 1 கோடியே 14 லட்சம் ஜிஎஸ்டி கட்டணும்...' ஏழை முதியவருக்கு வந்த கடிதத்தால் அதிர்ச்சி!

பல்வேறு உடல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு மனைவியின் பென்சன் தொகை மூலம் வாழ்க்கையை நடத்தி வந்த முதியவருக்கு வந்த ஜிஎஸ்டி கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட மளிகைதோப்பு பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வீட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி தனியார் காலணி தொழிற்சாலையில் பணியாற்றி இறந்த நிலையில், தனது மனைவியின் பென்சன் தொகை மூலம் வேலாயுதம் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த பல மாதங்களாக மனைவிக்கு வரவேண்டிய பென்சன் தொகை வராததால், இதுகுறித்து வேலாயுதம், ஆம்பூரில் உள்ள இந்தியன் வங்கியிற்கு சென்று கேட்டுள்ளார்.

அப்போது வங்கி அதிகாரிகள், ''உங்களுக்கு ஜிஎஸ்டி கடிதம் வந்துள்ளது. நீங்கள் 1 கோடியே 14 லட்சத்து, 24 ஆயிரத்து 816 ரூபாய் ஜி.எஸ்.டி வரியை செலுத்த வேண்டும்'' என தெரிவித்துள்ளனர்.

இதனால் செய்வறியாது திகைத்த வேலாயுதம், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், '' தனது வங்கி கணக்கு எண் மற்றும் தனது ஆவணங்களை சிலர் தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தனக்கு இரண்டு விலா எலும்பு உடைந்தும், இருதய அறுவை சிகிச்சை செய்தும், வேலைக்கு செல்ல முடியாமல், மனைவியின் பென்சன் பணத்தில் பிழைப்பு நடத்தி வருகிறேன். அந்த பணமும் வராத நிலையில், வங்கியில் சென்று கேட்ட போது, அவர்கள் 1,14,24,816 ரூபாய் வரி செலுத்த வேண்டும் என கூறுகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என வேலாயுதம் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து வேலாயுதம், '' ஜிஎஸ்டி கடிதம் வந்ததில் இருந்து பென்சன் தொகை நின்றுவிட்டது. இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, எனது வங்கி கணக்கு ஆவணங்களை வைத்து போலீசில் புகார் அளிக்க அறிவுறுத்தினர். ஆனால், போலீசில் எனது புகாரை வாங்கிக் கொள்ள மறுக்கின்றனர்'' என தெரிவித்தார்.

மேலும், ஆம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கூலி தொழிலாளிகளின் ஆவணங்களை வைத்து, சிலர் இதுபோன்ற மோசடியில் ஈடுபடுவதாகவும், மனைவியின் பென்சன் தொகையை வைத்து வாழ்க்கையை நடத்தி வந்த முதியவரின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.