விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள்; விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள்; விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்

பொங்கல் விடுமுறை முடிந்து பொதுமக்கள் சென்னைக்கு வரத்தொடங்கியுள்ள நிலையில், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் தென் மாவட்டத்தைச் சார்ந்த ஏராளமானோர் கல்வி மற்றும் வேலை நிமித்தமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் தங்கியுள்ளனர். அதே போல சொந்த ஊர்களில் இருந்து இங்கு குடியேறிவர்களும் உள்ளனர். இவர்கள் வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கலை முன்னிட்டு இம்முறை ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை வந்தது. இதனால் சென்னையில் இருந்து ஏராளமானோர் கார், பேருந்து, ரயில், இருசக்கர வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர். அந்த வகையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி கடந்த 3 நாட்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் வாகனங்கள் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடந்து சென்றதாக சுங்கச்சாவடி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்றுடன் (ஜன.18) விடுமுறை முடிந்து நாளை பணி நாள் என்பதால் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு வரத் துவங்கியுள்ளனர். இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. மேலும் சுங்கச்சாவடியில் ஐந்து வழித்தடங்களில் வாகனங்கள் செல்ல அனுமதித்து வந்த நிலையில், தற்போது போக்குவரத்து நெரிசல் காரணமாக 7 வழி தடங்களில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன. சுங்கச்சாவடி ஊழியர்களும் போக்குவரத்தினை சீர் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மாவட்ட போக்குவரத்து போலீசார் உள்ளிட்ட காவல்துறையினர் கனரக வாகனங்கள் செல்வதை தடுத்து நிறுத்தி, போக்குவரத்தினை சரி செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து செல்வதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.