ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் - பேரவையில் கொந்தளித்த அதிமுக எம்எல்ஏ
கடந்த 2025 ஆம் ஆண்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய கூட்டுறவு சங்க மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது.
நடப்பு ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகத்தைச் சீரமைக்கவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும், பதிவாளருக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கவும் வழிவகை செய்யும் சட்ட மசோதா கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி 2025ஆம் ஆண்டு ஜூன் திருப்பி அனுப்பினார். அதன்பின் இந்த சட்ட முன்முடிவு இன்று பேரவையில் மறு ஆய்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு, பேரவைத் தலைவர் பேசத் தொடங்கியவுடன் மற்ற மைக்குகள் ஆஃப் ஆகிவிடும். யாரும் ஆளுநர் மைக்கை ஆஃப் செய்யவில்லை. அவர் ஆளுநர் உரையை வாசித்து இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. உரையை வாசிக்காமல் பேச முயன்ற காரணத்தால், பேரவைத் தலைவராக பேசியதால் அனைத்து மைக்குகளும் ஆஃப் ஆகிவிடும் என்று தெரிவித்தார்.
பின்னர் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, "ஆளுநருக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்வதாகவும், முதல் தர மாநிலத்தில் worst class ஆளுநராக இவர் உள்ளார்" என்று தெரிவித்தார்.
அதேபோல் மமக ஜவாஹிருல்லா பேசுகையில், "உச்ச நீதிமன்றத்தில் பலமுறை குட்டுபெற்ற இந்த ஆளுநர். இதை திருப்பி அனுப்பி உள்ளார். ஆளுநர் மைக் அணைத்து வைக்கப்படவில்லை. உண்மைக்கு புறப்பான கருத்துகளை அவர் தெரிவித்துள்ளார்" என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய கொங்கு ஈஸ்வரன், "நாம் எவ்வளவு கண்ணியமாக நாகரிமாக நடந்து கொண்டாலும் ஆளுநர் மாறுவதாக இல்லை. ஆளுநர் சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியதை கண்டிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
இறுதியாக பேசி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், "ஆளும் கட்சி தயார் செய்து அளிக்கும் அறிக்கையை ஆளுநர் வாசிப்பது தான் மரபு. ஆளுநர் உரையை வாசிக்காமல் சென்றது கண்டத்திற்குரியது. எனவே ஆளுநரை திரும்ப பெற வேண்டும்" என்று தெரிவித்தார்.