தோல் தொழிற்சாலையில் வாயு கசிவு! 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

தோல் தொழிற்சாலையில் வாயு கசிவு! 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அடுத்த பக்காலப்பல்லி பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் இயந்திரத்தில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதில், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த இரு தொழிலாளர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அடுத்த பக்காலப்பல்லி பகுதியில் அதே பகுதியை சேர்ந்த அஷன் பாஷா என்பவருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை வழக்கம் போல பணியாளர்கள் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில் திடீரென எதிர்பாராத விதமாக தொழிற்சாலையில் உள்ள வாயு இயந்திரத்தில் இருந்து கேஸ் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த ஷேக் அலி (58) மற்றும் ஜமால் பாஷா (41) ஆகிய இருவரும் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.

இதை பார்த்ததும் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மற்ற ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக இருவரையும் மீட்டு, ஆம்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனாலும் அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பேர்ணாம்பட்டு போலீசார் கூறுகையில், “பக்காலப்பல்லி பகுதியில் செயல்பட்டு வரும் இந்த தோல் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம். விபத்தில் உயிரிழந்த ஷேக் அலி, ஜமால் பாஷா ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தொழிற்சாலையில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா? என்பது குறித்தும், வாயு கசிவுக்கான துல்லிய காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை முடிவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.