உச்சம் தொட்ட தங்கம் விலை : ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 உயர்வு

உச்சம் தொட்ட தங்கம் விலை : ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 உயர்வு

ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 9,520 என்ற உச்சபட்ச உயர்வை தொட்டிருக்கிறது. இதன்படி, ஒரு சவரன் ரூ. 1,34,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை அதிகரித்து வந்தாலும் அவ்வபோது சற்று குறைந்து நகை வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் அளித்தது. இருப்பினும் 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒரு சவரன் விலை ரூ. 1 லட்சத்தை தாண்டும் என நிபுணர்கள் கணித்திருந்ததைப் போன்றே கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி அதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் புதிய உச்சமாக ரூ. 1,04,800ஐ தொட்டது. அடுத்த ஓரிரு நாட்கள் சற்று குறைந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி 2ஆம் தேதியிலிருந்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.

2025ஆம் ஆண்டை போலவே 2026ஆம் ஆண்டும் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில்தான் இருக்கும் என நிபுணர்கள் கணித்திருக்கும் நிலையில், ஒரு சவரன் விலை விரைவில் ரூ. 2 லட்சத்தை தொட வாய்ப்பிருப்பதாக கூறியிருக்கின்றனர். சர்வதேச அளவில் பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவுவதால் தங்கத்தின் மீதான முதலீடு தொடர்ந்து அதிகரிக்கும் என்று கூறியிருக்கின்றனர்.

தங்கம் விலை

22 காரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று (ஜன 28) ஒரே நாளில் ரூ. 5,200 அதிரித்த நிலையில் இன்று மீண்டும் சவரனுக்கு ரூ. 9,520 அதிகரித்திருக்கிறது. இதுதான் வரலாற்றிலேயே உச்சபட்ச அதிகரிப்பாகும். நேற்று கிராமுக்கு ரூ. 650 அதிகரித்து ரூ. 15,610க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் கிராமுக்கு ரூ. 1,190 அதிகரித்து ரூ. 16,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் நேற்று ஒரு சவரன் ரூ. 1,24,880க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 9,520 அதிகரித்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,34,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

அதன்படி, நேற்று வெள்ளி ஒரு கிலோ வெள்ளி விலை புதிய உச்சமாக ரூ. 4 லட்சத்தை தாண்டிய நிலையில், இன்று மேலும் ரூ. 25,000 அதிகரித்து ஒரு கிலோ ரூ. 4,25,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.