இந்திய செய்தித்தாள் தினம்: டிஜிட்டல் யுகத்தில் செய்தித்தாள் வாசிப்பின் முக்கியத்துவம்!
இணையத்தில் செய்திகள் மின்னல் வேகத்தில் வந்து மறைகின்றன. இதனால் தகவல்கள் மூளையில் தங்குவதில்லை. ஆனால், ஒரு செய்தித்தாளை படிக்கும்போது, வாசகரின் கவனம் சிதறாமல் செய்தியின் சாராம்சத்தை உள்வாங்க முடிகிறது. இது நிதானமான சிந்தனைக்கு வழிவகுக்கிறது.
சுமார் 15 முதல் 20 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு காலை பொழுதை சற்றே பின்னோக்கிப் பார்த்தால், அதன் அழகே தனித்துவமானது. அதிகாலை பனியில் சைக்கிள் பெல்லின் சத்தமும், வாசலில் வந்து விழும் செய்தித்தாளின் ஓசையும் தான் பலருடைய அலாரமாக இருந்தது.
அன்று காபி, டீ குடிக்காமல் கூட இருந்துவிடலாம், ஆனால் கையில் 'பேப்பர்' இல்லாமல் காலைப் பொழுது விடியாது. பேருந்துப் பயணம், டீக்கடை பெஞ்சுகள், சலூன்கள் என எங்குத் திரும்பினாலும் மனிதர்கள் செய்தித்தாளில் மூழ்கியிருப்பார்கள். ஒரு செய்தியைப் பற்றி நான்கு பேர் விவாதிக்கும் இடமாக அவை இருந்தன.
இன்று நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. கைகளில் ஸ்மார்ட்போன்கள் ஆக்கிரமித்துள்ள சூழலில், பெரும்பாலான இளைஞர்கள் செய்திகளை மேலோட்டமாக 'ஸ்க்ரோல்' செய்வதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். இதனால் ஆழமான வாசிப்புப் பழக்கம் இளம் தலைமுறையினரிடம் குறைந்து வருகிறது.
இருப்பினும், அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்கள், ஊடகத்துறையில் இயங்குபவர்கள் மற்றும் சமூக மாற்றத்தை உன்னிப்பாகக் கவனிக்கும் இளைஞர்களிடம் மட்டுமே இன்று அச்சு ஊடகத்தின் நறுமணமும் அதன் மீதான தேடலும் எஞ்சியிருக்கிறது.
இத்தகைய சூழலில், அச்சு ஊடகத்தின் முக்கியத்துவத்தை பறைசாற்றவே ஆண்டுதோறும் ஜனவரி 29 அன்று 'இந்திய செய்தித்தாள் தினம்' (National Newspaper Day) கொண்டாடப்படுகிறது.
ஏன் கொண்டாடப்படுகிறது? இந்தியாவின் முதல் செய்தித்தாளின் வருகையை குறிக்கும் விதமாகவே இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. ஜனவரி 29, 1780 அன்று ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்பவரால் 'பெங்கால் கெசட்' (Bengal Gazette) என்ற முதல் வார இதழ் தொடங்கப்பட்டது.
இது 'ஹிக்கியின் கெசட்' என்றும் அழைக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், அதிகாரத்தின் தவறுகளை சுட்டிக்காட்டவும், மக்களுக்கு உண்மைகளைக் கொண்டு சேர்க்கவும் இந்த இதழ் பெரும் பங்காற்றியது. இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் மற்றும் முறையான தகவல் பரிமாற்றத்திற்கான விதையை விதைத்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளை நினைவு கூர்வதே இந்த தினத்தின் அடிப்படை நோக்கமாகும்.
தினமும் செய்தித்தாள் படிக்க வேண்டும் என்ற வாசகத்தை கேட்காமல் யாரும் கடந்து வந்திருக்க மாட்டோம். நீங்களும் அப்படித்தானா? இதற்குப் பின்னால் மிக முக்கியமான காரணங்கள் உள்ளன.
இணையத்தில் செய்திகள் மின்னல் வேகத்தில் வந்து மறைகின்றன. இதனால் தகவல்கள் மூளையில் தங்குவதில்லை. ஆனால், ஒரு செய்தித்தாளை விரித்துப் படிக்கும்போது, வாசகரின் கவனம் சிதறாமல் செய்தியின் சாராம்சத்தை உள்வாங்க முடிகிறது. இது நிதானமான சிந்தனைக்கு வழிவகுக்கிறது.
- ஒரு நல்ல செய்தித்தாள் என்பது மொழியின் களஞ்சியம். சரியான எழுத்து நடை, பிழையற்ற இலக்கணம் மற்றும் புதிய சொற்களைக் கற்றுக்கொள்ள இது ஒரு சிறந்த ஆசான். குறிப்பாக, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
- சமூக ஊடகங்களில் செய்திகள் எக்கச்சக்கமாக கிடக்கின்றன. ஆனால் செய்தித்தாள்களில் அரசியல், பொருளாதாரம், சர்வதேச உறவுகள், விளையாட்டு மற்றும் அறிவியல் எனத் தகவல்கள் நேர்த்தியாக வகைப்படுத்தப்பட்டு வழங்கப்படுகின்றன. இது ஒரு மனிதனின் பொது அறிவை சீராக வளர்க்கிறது.
- உலகத்தைப் பற்றிய பல்வேறுபட்ட தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதாக, செய்தித்தாள் வாசிப்பின் முக்கியத்துவத்தை குறித்து நடத்தப்பட்ட NIH ஆய்வில் தெரியவந்துள்ளது.
நம்பகத்தன்மை மற்றும் உண்மைத்தன்மை: இன்றைய டிஜிட்டல் யுகத்தில் 'போலிச் செய்திகள்' (Fake News) ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளன. வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் வரும் செய்திகள் பெரும்பாலும் சரிபார்க்கப்படாதவை. ஆனால், ஒரு செய்தித்தாளில் ஒரு வரி அச்சடிக்கப்படுவதற்கு முன்னால், அது நிருபர், துணை ஆசிரியர் எனப் பல நிலைகளில் சரிபார்க்கப்படுகிறது. எனவே, அதன் நம்பகத்தன்மை எப்போதும் உயர்வானது.
கண்களுக்கு ஆரோக்கியம்: ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பது கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அச்சு ஊடகம் அத்தகைய பாதிப்புகளைத் தருவதில்லை. இது ஒரு அமைதியான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.
தலையங்கம் மற்றும் பகுப்பாய்வு: செய்தித்தாள்களில் இடம்பெறும் 'தலையங்கம்' (Editorial) பகுதி, ஒரு நிகழ்வின் சாதக பாதகங்களை நடுநிலையோடு விளக்குகிறது. இது வாசகர்களுக்குச் சொந்தமான ஒரு கருத்தை உருவாக்கவும், விவாதிக்கும் திறனை வளர்க்கவும் உதவுகிறது.
வேலைவாய்ப்பு: "எனக்கு சிறுவயது முதல் தினமும் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் உள்ளது. அதில், ஒரு நாள் வெளியான வேலை வாய்ப்பு குறித்த செய்தியை படித்து, அந்த கம்பெனிக்கு சென்றேன். இப்போது நல்ல சம்பளத்தில் நல்ல வேலையுடன் இருக்கிறேன். எனது வாசிப்பு பழக்கம் தான், எனக்கு இந்த வேலையை கொடுத்தது என்கிறார் " பிரபல செய்திதாளில் பணிபுரியும் செல்வேந்திரன்.
டிஜிட்டல் மயம் - அச்சு ஊடகத்தின் சவால்கள்! டிஜிட்டல் புரட்சிக்கு பிறகு காகித செய்தித்தாளின் பயன்பாடு சற்றே சரிவை சந்தித்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. உடனடி தகவல்களை தரும் இணையதளங்கள் பெருகிவிட்டதால், அடுத்த நாள் காலை வரை செய்திக்காக காத்திருக்கும் பொறுமை மக்களிடம் குறைந்துவிட்டது.
இருப்பினும், ஒரு ஆவணப் பதிவாக (Documentation) இன்றும் செய்தித்தாளின் மதிப்பு குறையவில்லை. நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு அச்சிடப்பட்ட செய்திகளே இன்றும் முதன்மை ஆதாரமாக உள்ளன.
டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வதன் மூலமும், வாசகர்களுடன் இணைந்து வருவாய் ஈட்டுவதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடித்தாலும், பொதுமக்களுக்குத் தகவல் தெரிவிப்பதிலும், அதிகாரத்தில் இருப்பவர்களைப் பொறுப்புக்கூற வைப்பதிலும் அச்சு செய்தித்தாள்கள் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது என The Decline of Print Newspapers: Analyzing the Impact of Digitalization on Traditional Print Media என்ற தலைப்பில் வெளியான ஆய்வுக்கட்டுரை கூறுகிறது.
பல செய்தி நிறுவனங்கள் தங்களை 'இ-பேப்பர்' (e-paper) முறைக்கு மாற்றிக்கொண்டாலும், காகிதத்தின் ஸ்பரிசம் மற்றும் பக்கங்களைப் புரட்டி வாசிக்கும் அந்தத் திருப்தியை டிஜிட்டல் திரைகளால் ஒருபோதும் தந்துவிட முடியாது.
செய்தித்தாள் வாசிப்பு என்பது ஒரு தகவல் சேகரிப்பு மட்டுமல்ல, அது ஒரு ஒழுக்கமான வாழ்வியல் முறை. காலையில் எழுந்து உலகத்தை ஒரு காகித வழியாகப் பார்க்கும் அந்தப் பழக்கம், ஒரு மனிதனைச் சமூகத்தோடு இணைந்திருக்கச் செய்கிறது என்கின்றனர் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் கொண்டவர்கள்.