சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா: குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர்

சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா: குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர்

தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் சித்த மருத்துவத்தின் முக்கியத்துவத்தை போற்றும் வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில் சென்னை அருகே சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என கடந்த 2022ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்ட மசோதா அனுப்பப்பட்டது.

ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சில திருத்தங்களை குறிப்பிட்டு, சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கான சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட இந்த சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் சட்ட மசோதா குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, திருத்தங்களும் விரைவில் சரி செய்யப்படும்.

மேலும் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான திருத்தப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என ஏற்கனவே அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த அக்டோபர் 14 முதல் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. அதன்படி இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மொத்தம் 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்படி கடந்த அக்டோபர் மாதம் நடைப்பெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் தாக்கல் செய்தார்.

இந்த சட்ட மசோதாவை ஆளுநர் ஒப்புதலுக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு சட்டப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தன்னிடமே வைத்து கொள்வதாக குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்பட்டு வரும் நிலையில், சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்துள்ளார்.