கோடி ரூபாய் கொடுத்தாலும் ராதாவை கொடுக்க மாட்டேன்! பால் தருவதில் சாதனை படைத்த ஹரியானா எருமை!

ஹரியானாவில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற போட்டியில் முர்ரா இன எருமை ஒன்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 36 லிட்டர் பால் தந்து புதிய சாதனை படைத்திருக்கிறது.
ஹரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது சிங்வா கிராமம். இந்த கிராமம் கால்நடை பராமரிப்பு மற்றும் வளர்ப்புக்கு பெயர் பெற்றது. இதனை மேலும் ஊக்குவிக்கும் வகையில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக கால்நடைகளுக்கு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதில் பால் உற்பத்தி போட்டியானது சிங்வா கிராமத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகவும் பிரசித்தமானது.
கால்நடைகளுக்கான போட்டி!
வீட்டில் கால்நடைகளை வளர்ப்பவர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள கால்நடை பராமரிப்பு துறையின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அந்த வகையில், சிங்வா கிராமத்தைச் சேர்ந்த ஈஷ்வர் சிங்வா வளர்த்து வரும் ராதா என்ற முர்ரா இனத்தைச் சேர்ந்த எருமை ஒரே நாளில் சுமார் 36 லிட்டர் பால் தந்து புதிய சாதனை படைத்திருக்கிறது. இதற்கு முன்பு கைத்தலை கிராமத்தைச் சேர்ந்த ரேஷ்மா என்ற எருமை பால் உற்பத்தியில் முதலிடம் வகித்த நிலையில், தற்போது அந்த சாதனையை ராதா முறியடித்திருக்கிறது.
ராதா சாதனை படைத்திருக்கிறது!
தனது எருமையின் சாதனை குறித்து ஈஷ்வர் சிங்கா பேசுகையில், “கால்நடைக்கான பால் உற்பத்தி போட்டியில் எனது ராதாவையும் பங்கேற்க வைப்பதற்காக கால்நடை பராமரிப்புத் துறையின் இணையதளத்தில் விண்ணப்பித்தேன். அதன் பிறகு போட்டிக் குழு என்னை தொடர்பு கொண்டு, எருமையை போட்டிக்கு அழைத்து வருமாறு கூறினர். போட்டியானது சிங்வா காஸ் கிராமத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது.
போட்டியை கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குநர் ரவி செஹ்ராவத் தலைமையிலான குழு மேற்பார்வையிட்டது. அவர்கள் முன்னிலையில் ராதாவிடமிருந்து பாலை கறந்தோம். அவ்வாறு கறந்த பாலை இந்த குழுவானது 3 முறை அளந்து பார்த்தது. அதன் அளவு மூன்று முறையும் 35.669 என வந்தது” என்றார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜக்பீர் ஹன்சி கூறுகையில், “முன்னதாக கைத்தலையைச் சேந்த ரேஷ்மா என்ற எருமை 33.800 லிட்டர் பாலை தந்து சாதனை படைத்திருந்தது. இப்போது ராதா அந்த சாதனையை முறியடித்திருக்கிறது” என்றார்.
ஏற்கனவே விருது பெற்றிருக்கும் சிங்வா
ஈஷ்வர் சிங்காவின் தந்தை ஹோஷியார் சிங் ஒரு ஓய்வு பெற்ற பிடிஐ அலுவலர். அவர் பல ஆண்டுகளாக முர்ரா இன எருமைகளை வளர்த்து வருகிறார். மேலும் அவர் ஹரியானாவின் கால்நடை வளர்ப்புத் துறையில் நன்கு அறியப்பட்டவர். ஹோஷியாரைப் போலவே அவருடைய மகன் ஈஷ்வரும் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.
கால்நடை வளர்ப்பில் சிறந்த பங்காற்றியதற்காக ஹரியானா முதலமைச்சர் நயாப் சைனி. ஈஷ்வர் சிங்வாவை பாராட்டி இருக்கிறார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஹரியானா முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா ஆகியோரும் சிங்வாவை கௌரவித்துள்ளனர்.
கோடி கொடுத்தாலும் ராதாவை கொடுக்க மாட்டேன்!
தனது ராதா குறித்து ஈஷ்வர் சிங்வா கூறுகையில், “ஃபதேஹாபாத்தில் உள்ள கன்னடி என்ற கிராமத்தில் ரூ. 4.1 லட்சம் விலை கொடுத்து ராதாவை வாங்கி வந்தேன். ராதாவின் சந்தை விலையானது இப்போது ரூ. 15 லட்சத்தை எட்டியிருக்கிறது. அதனை பார்க்க நிறைய பேர் வருகிறார்கள். விலைக்கு கேட்கிறார்கள். ஆனால் நான் தர மறுத்துவிட்டேன். இப்போது ராதா புதிய சாதனை படைத்திருக்கும் நிலையில், கோடிகள் கொடுத்தாலும் விற்கமாட்டேன்” என்கிறார் நெகிழ்ச்சியுடன்.
மேலும் ராதாவை பராமரிப்பது பற்றியும் அவர் கூறினார். அப்போது, “தினமும் 3 முறை ராதாவை குளிப்பாட்டி, கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வேன். இப்படி மிகவும் சுத்தமாக பராமரித்து, சிறப்பு மூலிகை தீவனம் கொடுக்கிறேன்” என்றார்.
அதிக பால் உற்பத்தி செய்யும் எருமை இனங்களில் முர்ராவும் ஒன்று. இது ஹரியானாவின் கருப்பு தங்கம் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்த இன எருமைகள் ஒரு நாளைக்கு சுமார் 20 லிட்டருக்கும் அதிகமான பாலை தரக் கூடியவை. இந்த இனமானது ஹரியானாவின் ஹிசார், ஜிந்த் மற்றும் பிவானி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே வளர்க்கப்படுகின்றன.